சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: கைத்தறி மற்றும் நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்த ஸ்டாலினின் திமுக ஆட்சியில் நூல் விலை உயர்ந்தது. இலவச சீருடை, இலவச வேட்டி, சேலை போன்ற திட்டங்களுக்கான பணிகளை முழுமையாக தமிழக நெசவாளர்களுக்கு வழங்கவில்லை.
இதுபோன்ற நிகழ்வுகளால், நெசவாளர்கள் வாழ்க்கையை மிகுந்த சிரமத்துடன் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் குடிசைத் தொழில்போல ஓரிரு தறிகளை வைத்து நெசவுத் தொழில் செய்துவரும் நெசவாளர்கள் வீட்டில், தறிகள் உள்ள இடங்களை உள்ளாட்சித் துறை அலுவலர்கள் கணக்கிட்டு, அப்பகுதிகளுக்கு வணிகரீதியில் தொழில் வரி விதிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே, தமிழகமெங்கும் இதுபோன்ற கணக்கீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். நூலுக்கான வரிகளை முழுமையாக நீக்கவும், கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் தயாரிக்கப்படும் ஜவுளிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு பெற்று, மீண்டும் தமிழகத்தில் நெசவுத் தொழில் தலைநிமிர்ந்து நிற்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது