சென்னை: பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 70 வீடுகள் வனத்துறை மூலம் அகற்றப்பட்டன. சென்னை மாநகரில் எஞ்சி இருக்கும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் பரப்பளவு 698 ஹெக்டேராக சுருங்கிவிட்டது. இப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், இப்பகுதியை பாதுகாக்கும் வகையில் வனத்துறை சார்பில் ரூ.21 கோடியே 67 லட்சத்தில் புனரமைப்பு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பள்ளிக்கரணை சதுப்புநிலப் பகுதியை ஆக்கிரமித்துள்ள குடியிருப்புகளை அகற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், நீர்நிலையை ஆக்கிரமித்துள்ள கட்டிடங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பசுமை தீர்ப்பாயமும், பள்ளிக்கரணையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு அகற்றுமாறு உத்தரவிட்டது.
அதன்படி, மகாலட்சுமி நகர் பகுதியில் 70 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன. அதில் அங்கு நீண்ட காலமாக வசித்து வந்ததற்கான ஆவணங்கள் வைத்துள்ள 47 குடும்பங்களுக்கு செம்மஞ்சேரியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் ஒதுக்கப்பட்டன. மேலும், பயனாளி பங்கு தொகை தலா ரூ.6 லட்சத்து 5 ஆயிரத்தையும் அரசு வழங்கியுள்ளது. அவர்களை செம்மஞ்சேரியில் மறுகுடியமர்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது.
அதைத்தொடர்ந்து, வனத்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகள் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதற்கிடையே, வீடு கிடைக்காத 23 குடும்பத்தினர் தங்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.