சென்னை: நாடாளுமன்றத்தில் மென்மையாக பேசக்கூடாது; கடுமையாக பேசி தமிழகத்தின் தேவையை வலியுறுத்த வேண்டும் என்று திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் நவ.25-ல் தொடங்கி, டிச.20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு,சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுச்செயலாளர் துரைமுருகன், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நம் கொள்கைகளில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்று ‘இண்டியா’ கூட்டணி உறுப்பினர்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் பேசுங்கள். மாநில அரசை நடத்துவதில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே நிதி நெருக்கடிதான். எனவே, நிதி உரிமைகளை பெறும் வகையில் பேச்சு அமைய வேண்டும்.
மத்திய அரசின் பெரிய திட்டங்கள் தமிழகத்துக்கு வருவதில்லை என்பதைக் குறிப்பிட்டுப் பேசி, புதிய திட்டங்களை தமிழகத்துக்குக் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். மென்மையாகப் பேசக் கூடாது. கடுமையாகப் பேச வேண்டும். வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையான பங்களிப்பைக் கொடுக்க வேண்டும். எம்எல்ஏ, எம்.பி.,க்களை விட கட்சியில் மாவட்டச் செயலாளர்தான் முக்கியமானவர்கள். அவர்களுக்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும்.
தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்துங்கள். எம்.பி.க்கள் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பயணம் செய்யுங்கள். மாநில உரிமைகளுக்காக, தமிழக அரசின் கோரிக்கைகளுக்காக, தொகுதி மக்களின் தேவைகளுக்காக, நாடாளுமன்றப் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துங்கள். இவ்வாறு முதல்வர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கடந்த 10 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. தமிழகத்துக்காக மிகப்பெரிய திட்டம் என ஒன்றுகூட செயல்படுத்தப்படவில்லை.
பாஜக அரசின் பாசிச தன்மைக்கு எதிராகவும், இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநாட்டவும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை உறுதியாக எடுப்போம். இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.