ராமேஸ்வரம்: தொடர் கன மழையால் பாதிக்கப்பட்ட ராமநாதபுரம், ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
ராமேசுவரத்தில் ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்தது. எனவே, ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை மூலம் மழை நீர் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகரில் 30 இடங்களில் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்திருந்தது. 8 இடங்களில் நீரை வெளியேற்றும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
ராமேசுவரத்தில் மேக வெடிப்பு காரணமாக குறுகிய நேரத்தில் 31 செ.மீ. மழை பெய்துள்ளது. மண்டபத்தில் கடல் சீற்றம் காரணமாக 7 மீன்பிடி விசைப் படகுகள் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த படகுகளுக்கு மீன்வளத் துறை மூலம் பராமரிப்புத் தொகை வழங்கப்படும்.
மண்டபத்தில் பேரிடர் காலங்களில் படகுகள் சேதம் அடையாமல் இருக்க ரூ.25 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தூண்டில் வளைவை முழுமையாக முடிக்க ரூ.40 கோடி நிதி ஒதுக்குமாறு மண்டபம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக முதல்வரிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர் மழையால் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வசித்த 216 பேர், 5 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதுடன், மருத்துவ முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை வேளாண்மைத் துறை மூலம் ஆய்வு செய்து, உரிய நிவாரணம் வழங்கப்படும். ராமேசுவரம் ஓலைக்குடா பகுதியில் கடல் அரிப்பைத் தடுக்க சுவர் அமைப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி. சந்தீஷ், எம்.பி. நவாஸ்கனி, எம்எல்ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்), முருகேசன் (பரமக்குடி) மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உடனிருந்தனர்.