அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் மோதல், அடிதடி


திருநெல்வேலி: நெல்லையில் நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் இரு தரப்பினிடையே மோதல், அடிதடி ஏற்பட்டது.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக அதிமுக கள ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்டி, நெல்லை மாநகர் மாவட்ட கள ஆய்வுக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநகர் மாவட்டச் செயலர் கணேசராஜா, கொள்கை பரப்பு துணைச் செயலர் பாப்புலர் முத்தையா, அமைப்பு செயலர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதாபரமசிவன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

பாப்புலர் முத்தையா பேசும்போது, “நெல்லை மாநகரப் பகுதியில் கட்சி செயல்படாமல் இருக்கிறது. கட்சிப் பணிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், நாம் தமிழர் கட்சியைவிட மிகக் குறைவான வாக்குகளை நாம் பெற்றோம். தற்போது வேலை செய்வதற்கு ஆட்கள் இல்லை. வாக்காளர்கள் சேர்ப்பு முகாம் நடந்தபோதுகூட மாவட்டச் செயலாளர் இங்கில்லை. கட்சிப் பணிகளை மாவட்டச் செயலாளர் சரியாக செய்யவில்லை” என்று குற்றம் சாட்டினார்.

இதனால் மேடையில் இருந்த மாநகர் மாவட்டச் செயலாளர் கணேசராஜா ஆத்திரமடைந்து, ‘‘நீங்கள் எப்படி இதை சொல்லலாம். நான் இல்லை என்று உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கூறி, பாப்புலர் முத்தையாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர்கள் இருவரையும் வேலுமணி சமாதானப்படுத்தினார். அதற்குள் கணேசராஜா, பாப்புலர் முத்தையாவின் ஆதரவாளர்கள் மேடைக்கு கீழே ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அடிதடியில் இறங்கினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

“இங்கு யாரும் சண்டை போடக்கூடாது. பிரச்சினைகளை கட்சித் தலைமைக்கு தெரிவித்தால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும். உங்களுடைய குறைகளைக் கூறுங்கள். நாங்கள் பதில் அளிக்கிறோம்” என்று வேலுமணி தெரிவித்தார். அதன் பின்னர் சகஜநிலை திரும்பியது. தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

x