மதுரை: மதுரையில் அரசு நிலம் விற்பனை மோசடி வழக்கை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த கிறிஸ்தவ சீர்திருத்த இயக்க தலைவர் தேவசகாயம் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை தல்லாகுளத்தில் 31.10 ஏக்கர் நிலத்தை 1912 ல் அமெரிக்க மிஷனரியின் ‘அமெரிக்கன் போர்டு ஆப் கமிஷனர்ஸ் பார் பாரின் மிஷன்ஸ்’ (ஏபிசிஎப்எம்) வசம் தமிழக அரசால் ஒப்படைப்பு செய்யப்பட்டது. நிலத்தை தொண்டு நோக்கம் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான தொழில் மையம் அமைக்க பயன்படுத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
நிபந்தனையை மீறி சி.எஸ்.ஐ., மதுரை - ராமநாதபுரம் திருமண்டலம் நிர்வாகம் மூலம் மோசடியாக நிலம் விற்கப்பட்டுள்ளது. இப்பரிவர்த்தனையில் பெரும் தொகை முறைகேடு நடந்துள்ளது. இச்சட்டவிரோத நடவடிக்கைக்கு பல அரசு அதிகாரிகள் உடந்தை. போலீசில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. விசாரணை கோரி சிபிஐ-க்கு 2020-ல் புகார் அனுப்பினேன். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
மனுவை விசாரித்து நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு: பெரிய அளவில் மோசடி, சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. சர்ச்சிற்கு சொந்தமான சொத்தினை அபகரிக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளை கேள்வி கேட்ட நபர்களின் குரல் முடக்கப்பட்டதால், சர்ச் குரலற்றதாகிவிட்டது.
சர்ச் உறுப்பினர் என்ற முறையில் மனுதாரர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். சிபிஐ-க்கு புகார் அனுப்பினார். சொத்தானது தற்போதுவரை அரசின் சொத்தாகவே உள்ளது. அதை விற்க சர்ச் நிர்வாகத்துக்கு அதிகாரம் இல்லை.
பைபிளின் கோட்பாடுகளுக்கு எதிராக சர்ச் சொத்துக்கள் மோசடி செய்யப்படுகின்றன. சொத்துக்களை பராமரிக்க பிஷப் மற்றும் பிற நிர்வாகிகள் கடமைப்பட்டுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, தற்போது இந்தியா முழுவதும், சர்ச் சொத்துக்களை அதன் நிர்வாகிகளால் சரியாக நிர்வகிக்கப்படுவதில்லை. அந்நிலத்தை ஏதோ சுயநலத்திற்காக பயன்படுத்தினர்.
சி.எஸ்.ஐ.டி.ஏ மற்றும் சி.எஸ்.ஐ , மதுரை - ராமநாதபுரம் திருமண்டல நிர்வாகிகள் நேர்மையற்ற நோக்கில் பல அரசு அதிகாரிகளின் உடந்தையுடன் அரசின் ஒப்படைப்பு நிலத்தை சட்டவிரோதமாக மூன்றாவது நபர்களுக்கு விற்றுள்ளனர். ரூ.22 கோடி மதிப்பிலான சொத்திற்கு விதிகளை மீறி ரூ.91 லட்சத்து 43 ஆயிரத்து 472-க்கு மட்டுமே ரொக்க ரசீதை பெற்றுள்ளனர். எவ்வித உரிமையும் இல்லாமல் ரூ.1 கோடியே 20 லட்சத்து 43 ஆயிரத்து 472 க்கு அரசு சொத்து சட்டவிரோதமாக மாற்றப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசார் விசாரணையில் ஆர்வம் செலுத்தவில்லை.
குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் உள்ளது. மோசடி பரிவர்த்தனையில் தொடர்புடைய நபர்கள் மீது டில்லி சிபிஐ மற்றும் சென்னை சிபிஐ இணை இயக்குனர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.