ரஜினியை சந்தித்து பேசிய சீமான் விளக்கம்: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 8-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் முக்கிய பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்த நிலையில், நடிகர் ரஜினிகாந்திடம் நேரில் சந்தித்து வாழ்த்து பெறவேண்டும் என சீமான் கோரியிருந்தார்.
இந்நிலையில், ‘கூலி’ பட ஷூட்டிங்கின் முதல் ஷெட்யூல் முடிவடைந்த வீடு திரும்பிய ரஜினிகாந்த் சீமானை தொடர்பு கொண்டு சந்திக்க அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் சந்தித்து பேசினார். சுமார் அரை மணிநேரத்துக்கு மேல் நீடித்த இந்தச் சந்திப்பின் போது பரஸ்பரம் உடல்நலம் குறித்து இருவரும் விசாரித்து கொண்டனர். அரசியல் நிலைப்பாடுகள் குறித்து பேசிய அவர்கள், திமுகவின் ஆட்சி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, 2026 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாகவும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் சீமான் கூறும்போது, “இது அன்பின் நிமித்தமான சந்திப்பு தான். இதில் திரையுலகம், அரசியல் குறித்து விவாதித்தோம். அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. இது ரஜினியின் மனநிலைக்கு சரிபட்டு வராது என்று தான் முன்பு அவரை விமர்சித்தேன். இந்த களத்தில் நேர்மையாக இருப்பது மிகவும் கடினம். ஓர் ஆட்சியாளர் சிறப்பாக ஆட்சிசெய்யும் போது மக்கள் அந்த ஆட்சியை கொண்டாடுவார்கள். இதைத்தான் ரஜினி ‘சிஸ்டம் சரியில்லை’ என்று கூறியிருந்தார்.
நாடும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அரசியல் ஆர்வம் நிச்சயம் இருக்கும். ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருப்பதும் அரசியல் தான். விமர்சனங்களை தாங்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது. சம்பந்திகளை போல முதல்வரும், பிரதமரும் சந்தித்துக் கொள்கின்றனர். ஆனால் வெளியில் எங்களை ‘சங்கி’ என்று சொல்கின்றனர். ‘சங்கி’ என்றால் நண்பன் என்று அர்த்தம். திமுகவை எதிர்த்தாலே ‘சங்கி’ என்றால், அதை பெருமையாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்” என்றார் சீமான் கூறினார்.
நவ.26, 27, 28-ல் ஆரஞ்சு அலர்ட்: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி சனிக்கிழமை உருவாகக்கூடும். நவம்பர் 26-ல் கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகள், நவம்பர் 27-ல் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகள், நவம்பர் 28-ல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது, சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம்.
பட்டாபிராமில் ரூ.330 கோடியில் டைடல் பூங்கா திறப்பு: திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் ரூ.330 கோடி செலவில் 21 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். அப்பூங்காவில் இரண்டு நிறுவனங்களுக்கான தள ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார்.
‘நெசவாளர்கள் வீடுகள் கணக்கீடு’ - இபிஎஸ் காட்டம்: “தமிழகம் முழுவதும் குடிசைத் தொழில்போல ஓரிரு தறிகளை வைத்து நெசவுத் தொழில் செய்து வரும் நெசவாளர்கள் வீடுகளில், தொழில் வரி விதிப்பதற்காக நடத்தப்படும் கணக்கீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பனிசாமி கூறியுள்ளார்.
காற்று மாசு கட்டுப்பாடுகளை கண்காணிக்க குழு: டெல்லியில் அதிகரித்துள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் முழுமையாக அமல்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க குழு ஒன்றை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, ‘வட இந்தியாவில் நிலவும் காற்று மாசு பிரச்சினை என்பது ஒரு தேசிய அவசரநிலை. அதற்கு அரசியல் பழிகூறல் விளையாட்டை விட அனைவரின் கூட்டு முயற்சி தேவை’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
‘ஜெகன் மோகனுக்கு லஞ்சம் தர முயன்ற அதானி’ - இந்திய சூரிய ஒளி மின்சார நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அப்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனுக்கு லஞ்சம் கொடுக்க அதானி உறுதி அளித்தகாக அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஜெகனைச் சந்தித்த அதானி இந்த உறுதியினை அளித்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, “மத்திய தொகுப்பிலிருந்து புதுபிக்கத்தக்க எரிசக்தியை பெறுவதற்கு ஒடிசா மாநில அரசு அதிகாரிகள், அதானி குழுமத்திம் இமிருந்து லஞ்சம் பெற்றதாக கூறுவது பொய்யானது, ஆதாரமற்றது” என்று பிஜு ஜனதா தளம் கட்சித் தெரிவித்துள்ளது.
மணிப்பூர் வன்முறை - ஜெ.பி நட்டா கருத்து: மணிப்பூரில் தற்போது நிகழும் வன்முறைச் சம்பவங்களுக்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம் என்று பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பதில் அளிக்கும் வகையில், 3 பக்க கடிதத்தை நட்டா எழுதியுள்ளார். அதில், "20 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியில் இருந்தபோது உள்ளூர் பிரச்சினைகளைக் கையாள்வதில் காங்கிரஸ் சந்தித்த மோசமான தோல்வியின் பாதிப்புகளில் இருந்து மணிப்பூர் இன்னமும் விடுபடவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
கனடா அரசு புதிய விளக்கம்: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தொடர்பில்லை என்று கனடா அரசு விளக்கம் அளித்து உள்ளது.
அதானி விவகாரம்: வெள்ளை மாளிகை நம்பிக்கை: “அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளை நாங்கள் அறிவோம். இந்த விவாகரத்தை முறைப்படி பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம், நீதித்துறை நேரடி மேற்பார்வையில் விசாரிக்கும். இந்தியாவுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு வலுவான அடித்தளம் கொண்டது. மேலும், இரு நாட்டு மக்களுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இவை இந்த விவகாரத்தை வழிநடத்திச் செல்ல உதவும்” என்று வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
IND vs AUS முதல் டெஸ்ட்: ஒரே நாளில் 17 விக்கெட்டுகள்! - ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 67 ரன்கள் எடுத்தது. புற்கள் நிறைந்த பவுன்ஸர் ஆடுகளத்தில் முதல் நாளில் மட்டும் 17 விக்கெட்கள் சரிந்தன.
தாயகம் திரும்பிய 5 மீனவர்கள்: இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்.