கிருஷ்ணகிரி: ”மா” நிவாரணம் வாங்கி தாருங்கள் தாயே என விவசாயிகள் ஆட்சியரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (22ம் தேதி) விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், அனைத்து ”மா” விவசாயிகளின் ஒருங்கிணைப்பாளர் சவுந்திர ராஜன் மற்றும் விவசாயிகள் சிலர் பேசியதாவது: “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. மா விவசாயத்தின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். நிகழாண்டில், மழையின்றி, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால், மா மகசூல் பாதிக்கப்பட்டதுடன், மாந்தோட்டகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் காய்ந்தன.
இதனால் மா மகசூல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்தனர். தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்தி, மா மகசூல் 88 சதவீதம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர். பின்னர், 10 ஒன்றியங்களில் மகசூல் பாதிக்கப்பட்ட மா சாகுபடி விவரங்களை சேகரித்து வழங்க, தோட்டக்கலைத் துறையினருக்கும் ஆட்சியர் உத்தரவிட்டார்.
6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இதுவரை சாகுபடி சேகரிக்கும் பணிகள் முழுமையடையவில்லை. சாகுபடி விவரங்கள் சேகரிக்கும் பணியில், தோட்டக்கலைத் துறை அலுவலர்களுக்கு, வருவாய்த் துறையினர் ஒத்துழைப்பு இல்லை என கடந்த மாதம் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தெரிவித்தனர்.
பின்னர், வருவாய்த்துறை அலுவலர்கள் உரிய விவரங்களை உடனடியாக அளிக்க வேண்டுமென ஆட்சியர் உத்தரவிட்டும் இதுவரை வழங்கப்பட வில்லை. அடுத்த மாதம், எதிர்வரும் சீசனுக்காக மாந்தோட்டங்களை பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ள உள்ள நிலையில், இழப்பீடு கிடைப்பது கேள்வி குறியாக உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க, அரசு தயாராக உள்ள நிலையில், அலுவலர்களின் ஒத்துழைப்பு இல்லாததால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
மா விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தான் ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. மா விவசாயிகளை மாற்றாந் தாய் பிள்ளைகளாக தொடர்புடைய அலுவலர்கள் நடத்துவது வேதனையளிக்கிறது. எனவே, மா நிவாரணத்தை வாங்கி கொடுங்கள் தாயே என ஆட்சியரை வேண்டி கேட்டுக்கொள்கிறோம்” என்றனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு கூறும்போது, டிஜிட்டல் சர்வே பணிகளால், மா பாதிப்பு, சாகுபடி விவரங்கள் சேகரிக்கும் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்னும் 2 வாரங்களில் மா சாகுபடி விவரங்கள் முழுமையாக முடிக்கப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்படும், என்றார்.