விருதுநகர்: ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி குறைதீர்க் கூட்டத்தில் தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா


விருதுநகர்: ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி விருதுநகரில் நடைபெற்ற குறைதீர்க் கூட்டத்தில் தரையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரஜேந்திரன், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பத்மாவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் வேளாண்துறை சார்ந்த பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தின் தொடக்கத்தில், விருதுநகர் மாவட்டம் ஆமத்தூரில் அரசு புறம்போக்கு வண்டிப் பாதை நிலைத்தில் கம்பி வேலி அமைத்து தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றக்கோரி தமிழ் விவசாயிகள் சங்கத் தலைவர் நாராயணசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ராமசந்திர ராஜா ஆகியோர் தலைமையில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

அப்போது, வருவாய்த்துறை அதிகாரிகளைக் கண்டித்தும், மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். அதோடு, வண்டிப் பாதை ஆக்கிரமிப்பை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வவியுறுத்தி தொடர்ந்து கோஷமிட்டனர். அதையடுத்து, டிஎஸ்பி பவித்ரா தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் பேசுகையில், இப்பிரச்சினை தொடர்பாக மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும். ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவித்தார். அதையடுத்து, போராட்டத்தைக் கைவிட்டு குறைதீர்க் கூட்டத்தில் விவாசயிகள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் முருகன் பேசுகையில், வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் தடையின்றி உழவு கருவிகள் வாடகைக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

காரியாபட்டியைச் சேர்ந்த விவசாயிகள் பேசுகையில், வெங்காய பயிருக்கு கடந்த 3 ஆண்டுகளாக இழப்பீடு வழங்கப்படவில்லை என்றும், காப்பீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

வெம்பக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகர் பேசுகையில், பனையடிப்பட்டி நீர் வரத்து ஓடையை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், விவசாயிகள் ஏராளமானோர் பல்வேறு வேளாண் சார்ந்த பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

x