கும்பகோணம்: கும்பகோணம் தனியார் மண்டபத்தில் அதிமுக கள ஆய்வுக் குழுவின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.கே.பாரதி மோகன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ ராம.ராமநாதன் வரவேற்றார். கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பி.எஸ்.சேகர், ஜெ.பேரவை இணைச் செயலாளர் ஏ.வி.கே.அசோக் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், அமைப்புச் செயலாளர் ஆர்.மனோகரன், முன்னாள் அமைச்சர்கள் இரா.காமராஜ், பி.தங்கமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தொடர்ந்து முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறியதாவது, "அதிமுகவில் உள்ளவர்கள் மூத்த தலைவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். தற்போது அதிமுகவில் ஆபரேஷன் நடைபெற்று வருகிறது. கட்சியினர் மனம் விட்டு பேசினால் தான், நாங்கள் அதற்குரிய நடவடிக்கை (ஆபரேஷன்) செய்ய முடியும்.
அதிமுக கூட்டணிக்கு வருபவர்களை வரவிடாமல் தடுக்கின்றனர் எனச் சிலர் கூறி வருகின்றனர். ஆனால் கடந்த எம்பி தேர்தலில் கூட்டணி கட்சியான 2 கம்யூனிஸ்ட்களுக்கு ரூ.25 கோடி, கொங்கு முன்னேற்றக் கழகத்திற்கு ரூ.15 கோடி என மொத்தம் ரூ.40 கோடி தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கி உள்ளார். அதற்கான ஆதாரம் உள்ளது. கூட்டணி கட்சிகளுக்குப் பணம் கொடுத்தது மகாத்மா காந்தி ஸ்டாலின் தான்.
உத்தமரான ஸ்டாலின், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 67 உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நேரில் சென்று பார்வையிட வில்லை. விசாரிக்கவும் வில்லை. அவர், சிபிஐ வேண்டாம், சிபிசிஐடி மட்டும் போதும் என கூறுகிறார். ஆனால் நீதிமன்றம் நல்லத் தீர்ப்பை வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டில், சாராயம், போதை பொருள், பாலியல் வன்கொடுமை, பள்ளிச் சிறுவர்கள் கஞ்சா புகைப்பது உள்ளிட்ட குற்றங்களைத் தமிழக முதல்வர் கட்டுப்படுத்தவில்லை. அவர்களது கூட்டணியில் உள்ள கட்சியினர் எதுவும் கண்டுகொள்ளவில்லை. செந்தில் பாலாஜி அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்ற பிறகு, டாஸ்மாக் பாட்டில்களுக்கு ரூ.10க்கு பதிலாக, அவர் சிறைக்குச் சென்று வந்த பிறகு தற்போது ரூ.20 வாங்குகின்றார். இதன் மூலம் பல கோடி திமுகவிற்கு செல்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி, அரசுத் துறைகளை குறித்து மேடையில் விவாதம் செய்து கொள்வோம் என தற்போதுள்ள தமிழக முதல்வரைப் பார்த்து கேட்டார். ஆனால் அவர் பதில் கூறாமல், எலி குட்டியான தனது மகனான, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை விட்டுப் பேசவைக்கின்றார். எங்களிடமும் ஆயிரம் குட்டிகள் உள்ளன” என்றார்
தொடர்ந்து பேசிய அவர், “திமுக ஆட்சிப் பொறுப்பேற்று முதல் கையெழுத்து நீட் ரத்து செய்வது எனக் கூறிய தமிழக முதல்வர், 41 மாதங்கள் கடந்தும் இன்னமும் கையெழுத்திட வில்லை, அவரிடம் பேனா இல்லையா அல்லது மை இல்லையா என்பது தெரியவில்லை. ரூ.85 கோடியில் கருணாநிதி நினைவாகப் பேனா சிலை வைக்க உள்ளார். அவர் திமுக அறக்கட்டளை உள்ள நிதியில் கட்டிக்கொள்ள வேண்டுமே தவிர இதற்காக மக்கள் வரிப் பணத்தை வீணாக்கக்கூடாது.
அதானி குழுமத்தில் செயற்கை மின்சாரத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டமாகி உள்ளது எனத் தகவல் வந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதானி, தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் பார்த்துப் பேசி இருக்கின்றார். அப்படி என்றால், இருவருக்கும் இடையில் நடந்த பேரம் எவ்வளவு. இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவிக்கின்றார்.
இதேபோல் அனைத்து பொருட்கள் விலை வாசிகள் உயர்வு, வரிகள் உயர்வு, மின் கட்டணம் உயர்வு உள்ளிட்டவைகளுக்கு பதில் கூறும் வகையில் வரும் 2026ம் சட்டபேரவைத் தேர்தலில் திமுகவிற்குப் பாடம் புகட்ட வேண்டும். தமிழகத்தில் கொள்ளை, எதில் ஊழல் செய்யலாம் என்ற திட்டத்தோடு ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகின்றார்” என திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல் சீனிவாசன் பேசத்தொடங்கியதும், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் அம்பிகாபதி, நான் தான் பேசுவேன், மற்றவர்கள் அதிருப்தியில் உள்ள தொண்டர்களை பேச வையுங்கள். அப்போது கட்சியில் உள்ள குறைகள் தெரியும் எனக் கூச்சலிட்டார். இதனையறிந்த கட்சி நிர்வாகிகள் அங்கிருந்த அவரை அழைத்துச் சென்று ஓரமாக அமரவைத்தனர். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.