சென்னை: தமிழகத்தில் ரவுடியிசமும், குற்றங்களும் குறைந்துள்ளன. தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் - ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை என்பதை பழனிசாமி புரிந்துகொள்ள வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீ்திமன்றம் உத்தரவிட்டது குறித்து பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். முதலில் அவர் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக தன்னை பரிசீலித்துக் கொள்ள வேண்டும்.
கடந்த 2018-ல் நெடுஞ்சாலைத்துறையில் ரூ.4800 கோடி ஊழல் தொடர்பாக திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நாங்கள் கோராவிட்டாலும், நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பழனிசாமி தடை பெற்றார். நாங்கள் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஆனால், கள்ளக்குறிச்சி விவகாரத்தில், தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்லக் கூடாது என பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ல் திருப்பூர் அருகே தேர்தல் நேரத்தில் ரூ.570 கோடி லாரியில் பிடிபட்டது. கோவையில் இருந்து கொண்டு வரப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடுத்தோம். 2017-18-ல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதுவரை விசாரணை தொடங்கப்படவில்லை. சிபிஐ விசாரணை எப்படி இருக்கும் என்பதற்கு இதுவே உதாரணம். எனவே, சிபிஐ விசாரணையை எப்போதும் நாங்கள் கோருவதில்லை.
துரித நடவடிக்கை: கள்ளக்குறிச்சி சம்பவத்தில், முதல்வர் துரித நடவடிக்கை எடுத்து, 57 மருத்துவர்களை உடனே சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்ததுடன், மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டு, எஸ்பியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், பழனிசாமி இந்த வழக்கில் மேல்முறையீடு செல்லக்கூடாது, சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது என்கிறார். தனிப்பட்ட கொலைகளுக்கும் சட்டம் ஒழுங்குக்கும் சம்பந்தமில்லை.
இதை பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும். ஓசூர் நீதிமன்ற சம்பவம், தஞ்சை ஆசிரியை கொலை இரண்டுமே தனிப்பட்ட விவகாரங்களால் நடைபெற்றவை. தூத்துக்குடி உயிரிழப்புதான் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை. பழனிசாமி முதல்வராக இருந்தபோது, கோடநாட்டில் பணியில் இருந்த காவலாளி உட்பட 5 கொலைகள் நடந்துள்ளதுடன், பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் கும்பகோணம் தனியார் பள்ளி ஆசிரியை கொலை, பெரம்பலூர் அருகில் பட்டப்பகலில் ஆசிரியை குத்திக் கொலை, ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆசிரியை படுகொலை, கோவையில் கல்லூரி ஆசிரியை கழுத்து அறுத்து தீ வைத்து கொலை போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இவையெல்லாம் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை என எடுத்துக்கொள்ள முடியுமா?
அதிமுக ஆட்சியில் கொலைகள்: தற்போதைய ஆட்சியில் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளன. அதிமுக ஆட்சியில் 2020-ல் 1,672 கொலைகள் நடந்துள்ளன. அதேநேரம் நடப்பாண்டில் கடந்த ஜூன் வரை 792 கொலைகள் நடந்துள்ளன. காவல்துறையின் கடும் நடவடிக்கை இனியும் தொடரும். சென்னை காவல் ஆணையராக அருண் பொறுப்பேற்ற பின், மண்டலவாரியாக அதிகாரிகளை நியமித்ததால் சென்னையில் ரவுடியிசம் குறைந்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, “கொலை நடந்த இடம் பள்ளி, மருத்துவமனை, நீதிமன்றம் ஆகிய இடங்களாக இருக்கிறதே?” என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “நடந்த சம்பவங்களை நியாயப்படுத்தவில்லை. அதற்காக வருத்தப்படுகிறோம். அரசு உடனடி நடவடிக்கை எடுத்தது. சில சம்பவங்கள் தவிர்க்க முடியாத நிலையில் உள்ளன” என்றார்.
மேல் முறையீடு செய்யப்படுமா? - மேலும், “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிராக மேல் முறையீடு செய்வீர்களா?” என்றதற்கு, “அரசுதான் முடிவு செய்யும். கட்சி நிலைப்பாட்டை சொல்லியிருக்கிறேன்” என்றார்.