திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை (நவ.21) நடைபெற்றது. இதற்கு தலைவர் கீதா மைக்கேல்ராஜ் தலைமை வகித்தார். குடிநீர் வரி உயர்வு, வணிக உரிமம், தொழில் உரிமம் கட்டணம் உயர்வு உள்ளிட்ட 63 தீர்மானங்களை இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலர் தங்கமணி முன்மொழிந்தார்.
இதற்கு அதிமுக கவுன்சிலர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். ஆனால், நகராட்சித் தலைவர் கீதா மைக்கேல்ராஜ், தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்துவிட்டுச் சென்றார். இதைக் கண்டித்து அதிமுக கவுன்சிலர் ராமன் தலைமையில், 11 அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சி நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து பேசிய அதிமுக கவுன்சிலர்கள் “காவிரி குடிநீர் கட்டணம் மாதம் ரூ.75 ரூபாயாக இருந்ததை ரூ.200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண வியாபாரிகள் பாதிக்கப்படும் வகையில் வணிக உரிமம் வழங்க, தொழில் உரிம கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் செய்யாமல் நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுகிறது” என்றனர்.
பின்னர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் மணப்பாறை டிஎஸ்பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். அதிமுக உறுப்பினர்களின் திடீர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சி தலைவர் கீதா மைக்கேல்ராஜ் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், சுயேச்சை கவுன்சிலர் வசந்தி தேவி என்பவரும் அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.