கன்னியாகுமரி கடலில் கண்ணாடி நடைபாதை பாலப்பணி டிசம்பருக்கு நிறைவு: அமைச்சர் தகவல்


கன்னியாகுமரி கண்ணாடி இழை கூண்டு தரைப்பாலப் பணியை எ.வ.வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாகர்கோவில்: கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை - சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் இடையே நடந்து செல்வதற்கான கண்ணாடி நடைபாதை பாலம் அமைக்கும் பணி டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலாளர் செல்வராஜ், பொதுப்பணித் துறை அரசு கூடுதல் செயலாளர் மன்கத் ராம் சர்மா, குமுரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா மற்றும் அதிகாரிகளுடன் இன்று கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டு தரைப் பாலத்தினை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது: “முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில், கருணாநிதியால் 2000ம் ஆண்டில் நிறுவப்பட்டு தற்போது வெள்ளி விழா காண இருக்கும் திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கடல்சார் நடைபாதை பாலப்பணிகள் ரூ.37 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. இப்பாலத்தின் நீளம் 77 மீட்டர், அகலம் 10 மீட்டர் பவ்ஸ்ட்ரிங் ஆர்ச் வடிவமைப்பு கொண்டதாகும்.

இது நவீன தொழில் நுட்பத்தில் கடல் அரிப்பு, கடல் காற்றின் வேகம் போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. தற்போது விவேகானந்தர் பாறையினை கண்டுகளிக்கும் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் படகு மூலம் திருவள்ளுவர் சிலையினை காண செல்வதால் அதிக நேரம் விரயமாகின்றது. இந்நடைபாலம் அமைக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் எளிதாக திருவள்ளுவர் சிலைக்கு செல்லலாம். இப்பாலத்தில் 2.5 மீட்டர் அகலமுடைய கண்ணாடி அடித்தளம் கொண்ட நடைபாதை அமைக்கப்படவுள்ளது.

இதனால் கடலின் அழகினை சுற்றுலாப் பயணிகள் நடந்தவாறே கண்டு ரசித்து மகிழலாம். மேலும் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் மாவட்டத்தின் வருவாய் வளர்ச்சியும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அனைத்து பணிகளையும் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும். முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 1-ம் தேதி பாலத்தை திறந்து வைத்து சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறார் என்பதை இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார். ஆய்வுகளில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

x