மதுரை: அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, அந்நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை. அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கூலானிப்பட்டி, செட்டியார்பட்டி, அ. வல்லாளப்பட்டி, சண்முகநாதபுரம், நடுவளவு, தெற்கு வளவு, எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய சுமார் 5,000 ஏக்கரை, ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்திய வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனம் (Hindustan Zinc) டங்ஸ்டன் (Tungsten) கனிமச் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் எடுத்திருக்கிறது.
கடந்த நவ. 7-ம் தேதி சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 4-வது ஏலத்தில், மேலூர் நாயக்கர்பட்டி பகுதி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை ஹிந்துஸ்தான் நிறுவனம் எடுத்துள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது, ‘கடந்த ஜூலை 24 ல் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டிகிராமத்தில் டங்ஸ்டன் கனிமத்திற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்கக் குத்தகை உரிமம் வழங்க மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து நவ., 7 ல் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தினை தகுதியான நிறுனவமாக சுரங்க அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்திடம் இருந்து தமிழக அரசு எந்த விண்ணப்பமும் பெறவில்லை. அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை’ இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழக அரசு கூறியுள்ளது.