திண்டுக்கல்: அதிமுக மக்களிடம் இருந்து விலகிச்சென்றுவிட்டது. இதனால் திமுக ஆட்சி இன்னும் பத்து ஆண்டுகள் தொடரும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட பொன்னிமாந்துரை, அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, கரிசல்பட்டி மற்றும் கசவனம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் சிவகுருசாமி தலைமை வகித்தார். திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.
அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், ரேஷன் கடை கட்டிடம், புதிய சமுதாய கூடம், புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், என மொத்தம் 1.80 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்து பேசினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரையில், மாநில தேர்தல் ஆணையம் எப்பொழுது நடத்த தயார் நிலையில் உள்ளோம் என அரசுக்கு தெரிவிக்கிறதோ, அதன் அடிப்படையில் முதல்வர் உள்ளாட்சி தேர்தல் குறித்து முடிவு செய்வார். மக்கள் விரும்பும் ஆட்சி தான் தமிழ்நாட்டில் இருக்கும். அதிமுக மக்களிடம் இருந்து விலகிச்சென்றுவிட்டது.
இதனால் திமுக ஆட்சி இன்னும் பத்து ஆண்டுகள் தொடரும். ஒரு சில நிகழ்வுகளால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என கூற முடியாது. தமிழகம் அமைதிப்பூங்காவாக இருப்பதால் தான் வெளிநாட்டு முதலீடுகள், தொழில் தொடங்குபவர்கள் தமிழகத்தை நாடி வருகின்றனர். சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதற்கு இதுவே உதாரணம்” என்றார்.