சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடு: புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி ஆதங்கம்


புதுச்சேரி: புதுச்சேரி மாநில அனைத்து மீனவ அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் மீனவர்களுக்கு இபிசி இடஒதுக்கீடு 2 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தக் கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெற்றது.

சிந்தனை சிற்பி சிங்கார வேலர் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன், புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக தலைவரும், முன்னாள் எம்பியுமான ராமதாஸ் உட்பட 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்பி கலந்து கொண்டு பேசியதாவது: "காலாப்பட்டு பிள்ளைச் சாவடி பகுதிகளில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்கு சுடுகாட்டை காணவில்லை. அங்கு கற்களை கொட்டுகிறோம் என்றார்கள். ஆனால், கொட்டவில்லை. பிள்ளைச்சாவடி கோயில் எதிரே 50 மீட்டர் கற்களை கொட்டுங்கள் என்று மீனவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் கொட்டுவதற்கு கற்கள் இல்லை என்று கூறிவிட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் பீச் அருகே கற்களை கொட்டுகிறார்கள். இதுதான் அரசின் நிலைபாடு. போராட்டம் நடத்துவது, பாதிக்கப்படுவது மீனவர்கள். ஆனால் ஓட்டல் கட்டும் தனியார் தான் நலன் பெறுகின்றனர். நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கொள்கை. ஆனால், பாஜக அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம். சாதிவாரி அரசியல் பேசக்கூடாது என்கிறது. இதுதான் பாஜகவின் வெளிப்பாடு.

பாஜக கூட்டணி ஆளக்கூடிய பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி சமுதாய ரீதியாக இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் முழுமையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி ஒவ்வொரு சாதியினருக்கும் எவ்வளவு சதவீதம் இடஒதுக்கீடு தர வேண்டும் என்று ஒதுக்கீடு செய்து 73 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் 69 சதவீதம் அளவுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. அங்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது, மீனவர்களுக்கு குறைந்தபட்சமாக 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கினோம். இதை கொடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். அந்த 2 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பல்வேறு தடைகள் இருந்தது. நான் கேட்டது இடஒதுக்கீடு.

ஆனால், அதிகாரிகள் குழு சேர்ந்து உள்ஒதுக்கீடு திட்டத்தை கொண்டுவந்தார்கள். இந்த இடஒதுக்கீட்டுக்கும், உள்ஒதுக்கீட்டுக்கும் உள்ள வேறுபாட்டை அன்றைய தினம் நான் உணரவில்லை. இப்போது அதனால் பாதிப்பு வருவதை நன்றாக உணர முடிகிறது. இந்த 2 சதவீத இடஒதுக்கீடு போதாது. புதுச்சேரியில் உள்ள மீனவர்கள் 10 சதவீத இடஒதுக்கீடு கேட்கிறார்கள். இதை அரசு நிறைவேற்றலாம். மற்ற சமுதாயத்தினருக்கு கணக்கெடுப்பு இல்லை என்று கூறலாம்.

ஆனால் மீனவர் சமுதாயம் குறித்து சொல்ல முடியாது. ஏனென்றால் மீனவ சமுதாயம் குறித்து முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி நிர்வாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அந்த கணக்கீட்டை வைத்து மீனவர்களுக்கு உடனடியாக அரசு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். மீனவர்களுக்கு காங்கிரஸ் சார்பாக ஆதரவாக இருப்போம்" என்று வைத்திலிங்கம் எம்பி கூறினார்.

x