சத்தீஸ்கர் பள்ளிவாசல்களில் சொற்பொழிவு நடத்த வக்ஃப் வாரிய அனுமதி கட்டாயம்: மமக கண்டனம்


ஜவாஹிருல்லா | கோப்புப்படம்

சென்னை: சத்தீஸ்கர் பள்ளிவாசல்களில் சொற்பொழிவு நடத்த வக்ஃப் வாரிய அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவை திரும்பப் பெறப்பட வேண்டும் என்று மமக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிமை சிறப்புத்தொழுகையின் போது மார்க்கச் சொற்பொழிவு நடத்துவதற்கு வக்ஃப் வாரியத்தின் அனுமதிபெற வேண்டும் என்ற உத்தரவை சத்தீஸ்கர் மாநில வக்ஃப் வாரியம் பிறப்பித்து இருப்பதாகத் தெரிகிறது. ஆற்றப்படும் உரையை முன்கூட்டியே வக்ஃப் வாரியத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பிறகே உரை நிகழ்த்தப்பட வேண்டும் என்று சத்தீஸ்கர் வக்ப் வாரியம் உத்தரவிட்டிருப்பது அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயலாகும்.

இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைகளில் சொற்பொழிவு ஆற்றுவது கட்டாயக் கடமையாகும். அதற்கு வாரியத்திடம் அனுமதி பெறவேண்டும் என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல். அரசமைப்புச் சட்டத்தின் 25-ம் பிரிவு அளித்துள்ள உரிமையையும் பறிக்கும் செயலாகும். சத்தீஸ்கர் மாநில வக்ஃப் வாரிய தலைவர் சலீம் ராஜ் பாஜக அரசின் கைக்கூலியாகச் செயல்படுகிறார்.

சத்தீஸ்கர் மாநிலத்தைத் தாண்டி நாடு முழுவதும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதி தனது அடிமை விசுவாச மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வக்ஃப் வாரியத்தின் பணி என்பது வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாப்பது மற்றும் பராமரிப்பது ஆகியவை மட்டுமே ஆகும். இமாம்கள் எப்படித் தொழுகை நடத்த வேண்டும், என்ன பேசவேண்டும் என்பதை எல்லாம் முடிவு செய்யும் அதிகாரம் வாரியத்துக்கு வழங்கப்படவில்லை. இந்த உத்தரவு உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

x