கடலூர்: கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 18 வருடங்கள் ஆகியும் அரசு வழங்கிய வீட்டிற்கு இதுவரை பட்டா வழங்காத தமிழக அரசை கண்டித்து கடலூர் வரும் துணை முதல்வரை முற்றுகையிடுவோம் என மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தினர் தெரிவித்துள்ளது.
கடலூரில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட வீடுகளுக்கு 18 வருடங்கள் கடந்தும் பட்டா வழங்காத தமிழக அரசை கண்டித்து மீனவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் உலக மீனவர் தினத்தில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, கடலூரில் மீனவர் வாழ்வுரிமை இயக்கத்தின் நிறுவனத் தலைவர் ஏகாம்பரம் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது. அப்போது ஆர்ப்பாட்டத்தை விரைந்து முடிக்க காவல்துறையினர் வலியுறுத்தியதால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய மீனவ வாழ்வுரிமை இயக்கத்தின் நிறுவனர் ஏகாம்பரம், ”தமிழக அரசு மீனவ மக்களை வஞ்சிப்பதாகவும், அதிகார பதவிகளில் மீனவர்கள் இல்லாததால் ஒடுக்கப்படுகின்றோம். தங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படவில்லை என்றால் வரும் 25ம் தேதி கடலூருக்கு வருகை தரும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று ஏகாம்பரம் கூறினார்.