சென்னை: தமிழகத்தில் நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மிககனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று ( நவம்பர் 21) தமிழகத்தின் நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும். எனவே இந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று(21.11.24) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. இதன் காரணமாக, வருகின்ற 23-ம் தேதியில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு - இலங்கை கடற்கரைகளை நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.