சென்னை: சென்னை மாநகராட்சி கடப்பாக்கம் ஏரியை ரூ.58 கோடியில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் பணி தொடங்கியுள்ளது.
சென்னை மாநகரப் பகுதியில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்துக்கு பிறகு, மாநர பகுதியில் ஆக்கிரமிப்பில், பராமரிப்பின்றி இருந்த ஏரிகள், குளங்கள் மீட்கப்பட்டு சுற்றுச்சூழல் பூங்காக்களாக மாற்றப்பட்டு வருகிறது. அவ்வாறு 100-க்கும் மேற்பட்ட குளங்கள் மற்றும் ஏரிகள் மீட்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மணலி மண்டலம், 16-வது வார்டில் இடம்பெற்றுள்ள 135 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
அதற்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளது. தற்போது ஏரியில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. சுமார் 3 மீட்டர் ஆழத்துக்கு தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் ஏரியின் நீர் கொள்திறன் இரட்டிப்பாகும். அதாவது 1.9 மில்லியன் கன மீட்டராக கொள்திறன் உயர்த்தப்படும்.
மேலும் இப்பூங்காவில் பொதுமக்களை கவரும் வகையில் நடைபாதை, வண்ணத்துப் பூச்சி பூங்கா, இரு பறவைகள் தீவுகள், செயற்கை நீரூற்று, பொதுமக்கள் அமர்ந்து ஓய்வெடுக்க சாய்வு இருக்கை வசதி மற்றும் நடைபாதை வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.