உதகை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கோடேரி கிராமத்தைச் சேர்ந்த சு.மனோகரன் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அன்று மஞ்சூரில் இருந்து கீழ் குந்தா கிராமத்துக்கு அரசுப் பேருந்தில் பயணித்த போது 7 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. கீழ் குந்தாவில் இருந்து மஞ்சூர் திரும்பும் போது 11 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. போகும் போது சாதாரண கட்டணமும் வரும் போது விரைவு கட்டணமும் வசூலிப்பது குறித்து குழப்பமடைந்த பயணி, இதை எதிர்த்து நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் நடுவர் மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு நவம்பர் 11ம் தேதி 2022ம் ஆண்டு அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் பாதிக்கப்பட்டவரிடம் கூடுதலாக பெற்ற கட்டணத்தை திருப்பிக் கொடுக்கவும், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக இழப்பீடாக ரூ.20 ஆயிரம் வழங்கவும் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், பேருந்தில் ஜனவரி 19ம் தேதி 2018ம் ஆண்டு முதல் இன்று வரை அனைத்து பயணிகளிடமும் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை நுகர்வோர் சட்ட உதவி மையத்துக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
மேற்படி கூடுதல் கட்டணம் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் உரிய விசாரணை நடத்தி சரியான தொகையை கணக்கிட்டு செலுத்த உத்தரவிடப்பட்டது. தவறும் பட்சத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் நுகர்வோர் உதவி மையத்துக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மேலும் வட்டார போக்குவரத்து அலுவலர் பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து வகையான பேருந்துகளிலும் கட்டணப் பட்டியல் பயணிகளுக்கு தெரியும் வண்ணம் வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. மேலும் போக்குவரத்துக் கழகம் பாதிக்கப்பட்டவருக்கு வழக்கு செலவு தொகையாக ரூ.3,000 வழங்க வழங்க வேண்டும். உரிய காலத்தில் இழப்பீடுகளை வழங்க தவறும் பட்சத்தில் இது நாள் வரையிலான காலத்திற்கு 12 சதவீத வட்டியுடன் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தால் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் மேல்முறையீட்டு மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டு, மாவட்ட நுகர்வோர் மன்றம் அளித்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.