அரசுப் பள்ளி வகுப்பறையில்ஆசிரியர் ரமணி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவத்தை முன்வைத்து, தமிழகப் பள்ளிக் கல்வித் துறை மீது அடுக்கப்படும் குறைபாடுகள் மிகவும் கவனிக்கத்தக்கவை.
நடந்தது என்ன?
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகேயுள்ள சின்னமனை கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவரின் மகள்தான் 25 வயது ஆசிரியரை ரமணி. மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளயில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக அடிப்படையில் கடந்த ஜூன் 10-ம் தேதி தமிழ் ஆசிரியராக இவர் நியமிக்கப்பட்டார்.
அதே கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் 28 வயது மதன்குமார். சிங்கப்பூரில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உள்ளூரிலேயே மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ரமணியும், மதன்குமாரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதன்குமாரின் பெற்றோர், ரமணியின் பெற்றோரைச் சந்தித்து பெண் கேட்டுள்ளனர். ஆனால், மதன்குமாரின் நடவடிக்கை சரியில்லை என்று கூறி, ரமணியின் பெற்றோர் பெண் தர மறுத்துள்ளனர். இதையடுத்து, மதன்குமாரிடம் பேசுவதை ரமணி தவிர்த்து வந்துள்ளார்.
ரமணியை மீண்டும் சந்தித்து, திருமணம் செய்து கொள்ளுமாறு மதன்குமார் கேட்டுள்ளார். ஆனால், ரமணி மறுத்துள்ளார். இந்நிலையில், புதன்கிழமை காலை பள்ளிக்கு சென்ற மதன்குமார், வராண்டாவில் நின்று கொண்டிருந்த ரமணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால், ரமணியின் கழுத்து உட்பட பல்வேறு இடங்களில் குத்திவிட்டு தப்பியோட முயன்றார்.
ஆசிரியர்கள், மாணவர்களின் கூச்சலிட்டதைக் கேட்டு, பள்ளிக்கு வெளியே ஆட்சியர் வருகையையொட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சேதுபாவாசத்திரம் போலீஸார், மதன்குமாரை மடக்கிப் பிடித்தனர்.
இதனிடையே, பலத்த காயமடைந்த ரமணியை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ரமணியைக் குத்திய மதன்குமாரை போலீஸார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தப் படுகொலையின் பின்னணியின் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இருக்கலாம். ஆனால், சம்பவம் நடந்திருப்பதோ பள்ளியில். அதுவும் வகுப்பறைக்குள். இதுதான் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு மீதான அச்சத்தை மென்மேலும் கூட்டியிருக்கிறது.
கொல்லப்பட்ட ஆசிரியர் ரமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், “சொந்தப் பிரச்சினையாக இருந்தாலும், பள்ளிக்குள் இதுபோன்ற ஈடுபட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்பவர்களுக்கு வழக்கறிஞர்கள் யாரும் வாதாடக் கூடாது என கோருகிறேன். இவர்களைப் பொன்றவர்கள் கண்டிப்பாக தண்டனைக்குரியவர்கள். இவருக்கு கொடுக்கப்படும் தண்டனையானது ஒட்டுமொத்தமாக எல்லாருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்” என்று கூறினார்.
ஆனால், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தரப்பினரோ அரசுப் பள்ளிகளின் பாதுகாப்பு நிலை குறித்து அடுக்கும் குற்றச்சாட்டுகளோ மேலும் அதிர்ச்சிக்கு உரியவை.
“பணியிலிருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்த அரசு கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. எந்த அரசு துறை வளாகங்களுக்கும், அரசுப் பள்ளிகளுக்கும் முறையான காவலர் நியமனம் செய்யப்படுவது கிடையாது.
செலவுகளை குறைக்கிறேன் என்ற பெயரில் தேவையற்ற திட்டங்களை குறைப்பதற்கு பதிலாக அரசு அலுவலகங்களில், அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை, அத்தியாவசியத் தேவைகளை குறைக்கும் வேலையைத்தான் தமிழக அரசு, நிர்வாகம் மறுசீரமைப்பு என்ற பெயரில் செய்துவருகிறது. அதன் நீட்சியே இதுபோன்ற சம்பவங்கள். முறையான பாதுகாப்பு வசதி பள்ளி வளாகத்தில் இருந்திருந்தால் ஓர் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்” என்று குமுறியிருக்கிறது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்.
“சுற்றுச்சுவர் இல்லாத பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். காவலாளிகளை நியமிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என்கிறார் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன்.
“தவறுகளைக் கண்டித்தாலோ, போதைப் பொருள் பழக்கத்தை தடுத்தாலோ கூட ஆசிரியர்கள் தாக்கப்படுகின்றனர். எனவே, ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்கிறார் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் மா.குமரேசன்.
சிசிடிவே கேமாராக்கள் பொருத்துவது, சுற்றுச்சுவர் அமைப்பது தொடங்கி காவலாளிகளை நியமிப்பது வரை அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் குரலாக இருக்கிறது.