சென்னை: 2022-23-ம் ஆண்டில் நடைபெற்ற அரிசிக் கடத்தல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் உரியவர்களை சென்றடையாமல் கசிந்து செல்வதால் 2022-23-ம் ஆண்டில் நாடு முழுவதும் ரூ.69,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் இலவசமாக வழங்கப்பட வேண்டிய அரிசி மக்களுக்கு வழங்கப்படாமல் வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டதன் மூலமாக மட்டும் ரூ.1,900 கோடி தமிழக அரசுக்கு இழப்பு வந்துள்ளது என சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய ஆராய்ச்சிக்குழு என்ற பொருளாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மக்களுக்கு சென்றடைய வேண்டிய உணவு தானியங்கள் முறைகேடான வழிகளில் திருப்பிவிடப்படுவதை மத்திய, மாநில அரசுகள் தடுக்கத் தவறியது கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசியில் ரூ.1,900 கோடி மதிப்புள்ள 5.2 லட்சம் டன் அரிசி கடத்தி செல்லப்படுவதை மன்னிக்கவே முடியாது. அரசு மற்றும் அரசுத்துறை அதிகாரிகளின் துணையின்றி இந்த கடத்தல் நடைபெற்றிருக்க வாய்ப்பே இல்லை என்று தான் தோன்றுகிறது.
இதே காலக்கட்டத்தில் வெறும் ரூ.2.4 கோடி மதிப்புள்ள 42,500 டன் கடத்தல் அரிசியை மட்டும் தான் தமிழக அரசு பறிமுதல் செய்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கடத்தல் தொடர்பாக ஒரு சில நியாயவிலைக்கடை ஊழியர்கள் தவிர வேறு யார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தமிழகத்தில் உணவுத்துறையின் கிடங்குகளில் இருந்து நியாயவிலைக்கடைகளுக்கு அரிசி ஏற்றி செல்லும் அனைத்து சரக்குந்துகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அத்தகைய சூழலில் நியாயவிலைக்கடை பணியாளர்கள் அல்லது கீழ்நிலை அதிகாரிகளால் மட்டும் இந்த கடத்தலை செய்திருக்க முடியாது என்றும், மேலிடத்தின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமல்ல என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
வறுமையில் வாடும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசியை கடத்தி செல்வதை விட கொடிய குற்றச்செயல் எதுவும் இருக்க முடியாது. தமிழகம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் உணவு மானியமாக மட்டும் 2022-23-ம் ஆண்டில் ரூ.7,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதில் ஐந்தில் ஒரு பங்கு அளவு மக்களுக்கு சென்றடையாமல் வீணாகியிருப்பதை ஏற்று கொள்ள முடியாது. இனி வரும் காலங்களில் இத்தகைய உணவு தானியக் கடத்தலை தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 2022-23-ம் ஆண்டில் நடைபெற்ற அரிசிக் கடத்தல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.