நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு மொழி பேசும் பெண்கள் குறி்த்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் எழும்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரது பங்களாவில் தங்கியிருந்த கஸ்தூரியை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் நடிகை கஸ்தூரி ஜாமீன்கோரி எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த ஜாமீன் மனு பெருநகர குற்றவியல் நடுவர் தயாளன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. கஸ்தூரி தரப்பில், இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பதியப்பட்டுள்ளது. கஸ்தூரிக்கு 12 வயதில் ஆட்டிசம் பாதித்த மகன் உள்ளார். அவரைக் கவனித்துக் கொள்ள கஸ்தூரியைத் தவிர வேறு யாரும் இல்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டது.
கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்குவதற்கு மனிதாபிமான அடிப்படையில் போலீஸாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. அதையடுத்து குற்றவியல் நடுவர் தயாளன், இந்த வழக்கில் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை நடிகை கஸ்தூரி தினமும் காலை 10.30 மணிக்கு எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்