கலைஞரின் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட 3 திட்டங்களுக்கு ரூ.1,747 கோடி விடுவிப்பு: தமிழக அரசு அறிவிப்பு


சென்னை: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் 1 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுதல், ஊரக வீடுகள் சீரமைப்புத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் ஆகியவற்றுக்கு ரூ. 1,747.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது​குறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்திக்​குறிப்பு: கலைஞரின் கனவு இல்லம் திட்​டத்​தின் கீழ் 2024-25-ம் ஆண்டில் 1 லட்சம் புதிய கான்​கிரீட் வீடுகள் கட்ட ஒரு வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.3,500 கோடிக்கு அனுமதி ஆணை வழங்​கப்​பட்​டுள்​ளது. தற்சமயம் வரை முதல்​கட்​டமாக அரசால் ரூ.300 கோடி நிதி ஒதுக்​கீடு வழங்​கப்​பட்டு, இதுவரை பயனாளி​களுக்கு வீட்​டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.252 கோடி விடுவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதவிர பயனாளிகள் பயனடை​யும் வகையில், குறைந்த விலை​யில் சிமென்ட் மூட்​டைகள் டான்​செம் நிறு​வனத்​திட​மிருந்​தும், இரும்​புக் கம்பிகள் டெண்டர் மூலமும் கொள்​முதல் செய்து வழங்​கப்​பட்டு வருகிறது. இத்திட்​டத்​துக்கு அரசால் ஏற்கெனவே ரூ.300 கோடி வழங்​கப்​பட்​டுள்ள நிலை​யில் தற்போது மேலும், ரூ.500 கோடி வழங்​கப்​பட்டு வீடு​களின் கட்டு​மானத்​துக்கு ஏற்ப பயனாளி​களின் வங்கி​கணக்​குக்கு நேரடியாக தொகை விடுவிக்​கப்​பட்டு வருகிறது.

அதேபோல், ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்​டத்​தின்​கீழ் இந்நி​தி​யாண்​டில் ஒரு லட்சம் வீடுகளை சீரமைக்க அனுமதி வழங்​கப்​பட்டு, அரசால் ஏற்கெனவே ரூ.150 கோடி வழங்​கப்​பட்​டிருந்த நிலை​யில் தற்சமயம் மேலும் ரூ.450 கோடி விடுவிக்​கப்​பட்​டுள்​ளது. அதேபோல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் - 2-ன் கீழ் கிராம ஊராட்​சி​யில் தேவைப்​படும் அடிப்படை உட்கட்​டமைப்பு பணிகள் கண்டறியப்​பட்டு செயல்​படுத்​தப்​படு​கிறது.

இத்திட்​டத்​தில், 53,779 பணிகள் கடந்த மூன்​றாண்​டு​களில் முடிக்​கப்​பட்​டுள்ளன. நடப்​பாண்​டில், இத்திட்​டத்​தின்​கீழ் 2,482 கிராம ஊராட்​சிகளில் 15,695 பணிகள் எடுக்​கப்​பட்டு 12,722 பணிகள் முடிக்​கப்​பட்​டுள்ளன. இதுவரை, அரசால் ரூ.347.50 கோடி விடுவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த திட்​டங்​களின்​கீழ் எடுக்​கப்​பட்​டுள்ள பணி​கள் ​முழு​வீச்​சில் நடை​பெற்று வரு​கின்றன. இவ்​வாறு அ​தில் கூறப்​பட்​டுள்​ளது.

x