ஆசிரியை படுகொலை முதல் கள்ளக்குறிச்சி வழக்கில் ஐகோர்ட் அதிரடி வரை | டாப் 10 விரைவுச் செய்திகள் 


தஞ்சை: வகுப்பறையில் அரசுப் பள்ளி ஆசிரியை படுகொலை: தஞ்சை மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்றின் வகுப்பறையிலேயே ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் வட்டம், சின்னமனையைச் சேர்ந்த முத்து என்பவரின் மகள் 26 வயது ரமணி. இவர் மல்லிப்பட்டிணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார். இந்நிலையில், புதன்கிழமை காலை ரமணி பணியாற்றி பள்ளிக்கு மதன் என்பவர் சென்றார். அங்கு வகுப்பறைக்குள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த ரமணியின் கழுத்தில் கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

உடனடியாக சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சேதுபாவசத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, மதன் குடும்பத்தினர் ரமணியை பெண் கேட்டு அவரது வீட்டிற்குச் சென்ற நிலையில், மதனைப் பிடிக்கவில்லை என ரமணி கூறியதாகக் கூறப்படுகிறது.

சட்ட நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி: “தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசுப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ரமணி மீதான தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். அதேவேளையில், இச்சம்பவத்தை கண்டித்துள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் குற்றச்சாட்டு: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “சமீபகாலமாக தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணி செய்யும் இடங்களில் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. பணியிலிருக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இந்த அரசு கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. இந்த மனிதாபிமானமற்ற செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

செலவுகளை குறைக்கிறேன் என்ற பெயரில் தேவையற்ற திட்டங்களை குறைப்பதற்கு பதிலாக அரசு அலுவலகங்களில், அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை, அத்தியாவசியத் தேவைகளை குறைக்கும் வேலையைத்தான் தமிழக அரசு, நிர்வாகம் மறுசீரமைப்பு என்ற பெயரில் செய்துவருகிறது. அதன் நீட்சியே இதுபோன்ற சம்பவங்கள். முறையான பாதுகாப்பு வசதி பள்ளி வளாகத்தில் இருந்திருந்தால் ஓர் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும்” என்று கூறியுள்ளது.

நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன்: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை - எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் கேமராக்கள் பொருத்த எதிர்ப்பு - “தமிழகத்தில் போக்குவரத்து சிரமமாக இருக்கக்கூடிய குக்கிராமங்கள் உள்ளிட்ட மருத்துவ சேவை தேவைப்படுகிற கிராமப் புறங்களுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் சென்று பணியாற்றுகின்றனர். அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில், கேமரா அமைத்து கண்காணிக்கப் போகிறோம் என்று பொது சுகாதாரத்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.” என்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி மருத்துவர்களை கண்காணிப்பதற்கு அரசு மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நவ.25, 26-ல் கனமழை வாய்ப்பு: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 23-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். இதனால், நவம்பர் 25, 26-ல் டெல்டா, தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்டில் வாக்குப்பதிவு: மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டாவது கட்டமாக 38 தொகுதிகளுக்கும் புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குகள் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

உக்ரைனில் அமெரிக்க தூதரகம் மூடல்: ரஷ்ய - உக்ரைன் போர் மேலும் தீவிரமடையும் என்ற அச்சத்துக்கு மத்தியில், ரஷ்யா குறிப்பிடத்தகுந்த வான்வழித் தாக்குதல் நடத்தலாம் என்ற எச்சரிக்கையால், உக்ரைனின் கீவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது. பிரையான்ஸ் பகுதியில் உள்ள ஆயுதக்கிடங்கின் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக ரஷ்யா குற்றம்சாட்டிய மறுநாள் இந்த வான்வழி தாக்குதல் எச்சரிக்கை வந்துள்ளது.

கள்ளக்குறிச்சி வழக்கு: ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி போலீஸார் உடனடியாக சிபிஐ அதிகாரிகள் வசம் ஒப்படைக்க வேண்டும். அதன்பேரில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பை எதிர்க்கட்சி தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

‘சிபிஐ-க்கு மாற்றியதை எதிர்த்து மேல்முறையீடு’ - "சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றி இருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். சிபிசிஐடி விசாரணையே சரி என்று நிரூபிக்கும் அளவுக்கு எங்களிடம் ஆதாரம் உள்ளதால் மேல்முறையீட்டில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.

அரிட்டாபட்டியில் ‘டங்ஸ்டன் சுரங்கம்’ அமைக்க எதிர்ப்பு: மதுரை - மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க நடந்த ஏலத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், உடனடியாக அதனை ரத்து செய்ய வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

x