மேட்டூர்: “மகளிர் உரிமைத்தொகையை கொடுத்தது திமுக தான் என மக்களுக்கு சரியாக தெரியவில்லை” என சேலம் எம்பி டி.எம்.செல்வகணபதி கூறியுள்ளார்.
மேட்டூர் அடுத்த கருமலைக்கூடலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் தங்கமுத்து தலைமையில் இன்று நடந்தது. இதில் மேற்கு மாவட்ட செயலாளரும், எம்.பி-யுமான டி.எம். செல்வ கணபதி கலந்து கொண்டார். இதில், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம், பூத் கமிட்டி உறுப்பினர்கள் அமைப்பது, வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் சிறப்பு முகாம், 2026 சட்டமன்ற தேர்தல் பணி உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் திமுக மேற்கு மாவட்டச் செயலாளரும், எம்பியுமான செல்வகணபதி பேசியதாவது: “பூத் கமிட்டி கலந்தாய்வு கூட்டத்தில் கமிட்டியில் நியமிக்கப்பட்டவர்கள் ஒரு சிலர் மட்டுமே வருகிறார்கள், மற்றவர்கள் யாரும் கலந்து கொள்வதில்லை என புகார் வருகிறது. எனவே பூத் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் ஆய்வு கூட்டத்தில் கலந்துகொள்ள அந்தந்த பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். நமது ஆட்சி இதே நிலையில் இயங்கினால் மீண்டும் 2026ல் திமுகதான் வெற்றி பெறும்.
எடப்பாடி தொகுதியில் 85 ஆயிரம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை பெற்றுக் கொடுத்துள்ளோம். 825 கோடி விவசாய கடன் தள்ளுபடி, 436 கோடி மகளிர் சுய உதவிக் குழு மற்றும் நகைக் கடன் தள்ளுபடி செய்துள்ளோம். ஆனால், எடப்பாடி தொகுதியில் கடந்த தேர்தலில் 77 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்றோம். இது நம்மளுடைய தவறு உள்ளது. மகளிர் உரிமைத் தொகை கொடுத்தது திமுக தான் என மக்களுக்கு சரியாக தெரியவில்லை. இதனை திமுகவினர் தெரிய வைக்கும் வகையில் சிறப்பாக களப்பணியில் ஈடுபட வேண்டும்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக அங்குள்ள அரசுக்கு எதிராக வதந்திகள் மற்றும் பொய் பிரச்சாரங்களை பரப்ப 10 லட்சம் சமூக வலைதள குழுக்களை உருவாக்கி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வைத்தது. அதேபோல், நாமும் அதிகப்படியான சமூக வலைதள குழுக்களை உருவாக்கி நமது ஆட்சியின் சிறப்பு மற்றும் உண்மை செய்திகளை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும்” என்று எம்பி செல்வ கணபதி கூறினார். இந்த செயற்குழுக் கூட்டத்தில் நகரம், ஒன்றியம், பேரூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.