“இண்டியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள்...” - செல்வப்பெருந்தகை தகவல்


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர் சந்திப்பு.

திருநெல்வேலி: இண்டியா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வரும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: "திருநெல்வேலி மாவட்டம் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் கொலை வழக்கில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் என குற்றப்புலனாய்வுத் துறைக்கு வழக்கு மாற்றப்பட்டது. தொழில்நுட்ப ரீதியான விசாரணையும், அறிவியல் பூர்வமான விசாரணையும் நடந்து வருகிறது.

அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் கொலை வழக்கை போன்றே கே.பி.கே.ஜெயக்குமார் வழக்கு உள்ளது. சிபிஐ விசாரித்த நிலையில் கே.என்.நேரு சகோதரர் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. ஜெயக்குமார் வழக்கை சிபிசிஐடி விசாரணை தீவிரப்படுத்திய நிலையில் வழக்கில் தொடர்புடைய 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் ஐஜி கூறியுள்ளார்.

விரைவில் குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள். இந்த வழக்கில், எடுத்தோம் கவிழ்த்தோம் என யாரையும் குற்றவாளி என்று சொல்லிவிட முடியாது. இண்டியா கூட்டணியில் எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் என சிலர் செயல்பட்டு கருத்துக்களை தெரிவிக்கின்றனர். கூட்டணி வலுவாக உள்ளது. இண்டியா கூட்டணியை சமுத்திரம் போன்றது. அதில், அலைகள் இருக்கத்தான் செய்யும்.

தேர்தல் நேரத்தில் அலைகள் ஓய்ந்து அமைதி ஏற்படும். மேலும் சில கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது. வயநாட்டு தேர்தலில் பிரியங்கா காந்தி மிகப்பெரிய வெற்றியை பெறுவார். இதுபோல் ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநில தேர்தலில் அனைத்து இடங்களிலும் வெற்றி எங்களுக்கு உறுதியாகி உள்ளது" என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். ராபர்ட் புரூஸ் எம்.பி., ரூபி மனோகரன் எம்எல்ஏ, முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

x