மதுரை: குரூப் 1 பணியிடங்களுக்கு போலி தமிழ் வழிக் கல்வி சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு மேலும் 2 மாதம் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் சக்திராவ். இவர் டிஎன்பிஎஸ்சி நடத்தி குரூப் 1 தேர்வில், தொலை நிலைக்கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இடஒதுக்கீடு சலுகை வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தொலை நிலைக்கல்வியில் பயின்றவர்களுக்கு தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீடு சலுகை வழங்குவது சட்டவிரோதம் என அறிவித்து, பல்கலைக்கழகங்களில் போலி தமிழ் வழிக் கல்வி சான்றிதழ் வழங்கியது தொடர்பாக விசாரிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி சக்திராவ், மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி அமர்வு விசாரித்தது. அப்போது, போலி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில், "34 நபர்கள் தமிழ் வழியில் பயின்றோருக்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் குரூப் 1 அலுவலராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் பயின்ற 4 பேர் போலியான சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளனர். அவர்கள் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னையிலுள்ள மெட்ராஸ் பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பயின்றோர் வழங்கிய தமிழ் வழியில் பயின்றோருக்கான சான்றிதழ்களில் பிரச்சனை இல்லை. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் பயின்ற 16 நபர்கள் தமிழ் வழிக்கல்வி சான்றிதழை சமர்ப்பித்துள்ளனர். அவர்களின் 3 நபர்கள் மீது சந்தேகம் உள்ளது. அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் நீதிபதிகள், நாட்டில் லட்சக்கணக்கான ஏழை இளைஞர்கள், நள்ளிரவுகளை விளக்குகளில் எரித்துக்கொண்டு குரூப் 1 போன்ற வேலை வாய்ப்புகளுக்கு கடுமையாக உழைத்து வருகின்றனர். அவர்களின் கனவுகள் போலிச் சான்றிதழ்கள் மூலம் வேலை வாய்ப்பைப் பெறும் சட்ட விரோத செயல்களால் புதைந்து போகின்றன. இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் 2021ல் உரிய உத்தரவு பிறப்பித்தாலும், தற்போது தான் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்களை உறுதி செய்ய மட்டும் விசாரணை அமைப்புக்கு 3 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தவிர பிற பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற விசாரணை ஓரளவுக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
வழக்கின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு மேலும் 2 மாதம் அவகாசம் வழங்கப் படுகிறது. இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை முறையாக நடைமுறைப்படுத்தி அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை 2025ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.