மா.செ.-க்கு எதிராக முன்னாள் எம்எல்ஏ போர்க்கொடி - சிவகங்கை அதிமுகவில் வெடித்த கோஷ்டி பூசல்!


உமாதேவன், செந்தில்நாதன், பாஸ்கரன்

சிவகங்கை: அதிமுக மாவட்டச் செயலாளருக்கு எதிராக முன்னாள் எம்எல்ஏ போர்க்கொடி தூக்கியதால் சிவகங்கை மாவட்ட அதிமுக கோஷ்டிபூசல் வெளிச்சத்துக்கு வந்தது.

சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்று, கடந்த 2016-21 வரை அமைச்சராக இருந்தவர் ஜி.பாஸ்கரன். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் சீட் கொடுக்கப்பட்டது. தேர்தலில் செந்தில் நாதன் வெற்றி பெற்று எம்எல்ஏ-வானார். அதன் பின்னர் செந்தில்நாதன் தரப்பு, ஜி.பாஸ்கரன் தரப்பை கட்சி நிகழ்ச்சிகளில் புறக்கணித்து வந்தது.

இதுகுறித்து கட்சி தலைமையிடம் ஜி.பாஸ்கரன் தரப்பு தெரிவித்தது. இதையடுத்து அவரை சமரசப்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு அவருக்கு மாநில அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன் சிவகங்கையில் நடந்த மாவட்ட ‘ஜெ’ பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில் ஜி.பாஸ்கரனின் புகைப்படம் இடம் பெறவில்லை. இதனால் அவர் கூட்டத்தை புறக்கணித்தார்.

தொடர்ந்து ஜி.பாஸ்கரன் ஆதரவாளர் ஒட்டிய ஜெயலலிதா பிறந்தநாள் வாழ்த்து சுவரொட்டியில் செந்தில்நாதன் புகைப்படம் இடம்பெறவில்லை. இதனால் மீண்டும் இரு தரப்புக்குள் கோஷ்டி பூசல் தலை தூக்க தொடங்கியது. இந்நிலையில் சிவகங்கையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ கே.கே.உமாதேவன், தன்னை முறையாக கூட்டத்துக்கு அழைக்கவில்லை என்று கூறி மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனை விமர்சித்து பேசினார்.

இதை எதிர்த்து கேட்ட செந்தில்நாதன் ஆதாரவாளரான பிரபுவுக்கும், கே.கே.உமாதேவன் தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஏற்கெனவே செந்தில்நாதன், ஜி.பாஸ்கரன் இரு தரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது முன்னாள் எம்எல்ஏ கே.கே.உமாதேவன் மாவட்டச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் சிவகங்கை மாவட்ட கோஷ்டி பூசல் வெளிச்சத்துக்கு வந்தது.

இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக, அமமுக, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பல அணிகளாக உள்ளன. பிரிந்து சென்ற தொண்டர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து வலுப்படுத்தாமல், இருப்பவர்களே மோதிக் கொள்வது வேதனையாக உள்ளது. ஜெயலலிதா இருக்கும் வரை கோஷ்டிப் பூசலுக்கு இடமில்லாமல் இருந்தது. கட்சி நிர்வாகிகள் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய நவ.26ம் தேதி வரும் கள ஆய்வுக்குழு கோஷ்டிபூசல் குறித்து தலைமையிடம் கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று கூறினர்.

இதுகுறித்து மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் தரப்பு கூறுகையில், ”கே.கே.உமாதேவனை மாவட்டச் செயலாளர் மொபைலில் அழைத்துள்ளார். இணைப்பு கிடைக்காததால் அவரது மகனிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதில் கோஷ்டிபூசல் என்பது கிடையாது” என்று கூறினர்.

x