2026 தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மையுடன் வெற்றி - அர்ஜுன் சம்பத் கணிப்பு 


திருவள்ளூர்-பூங்கா நகர் பகுதியில் இன்று நடை பெற்ற இந்து மக்கள் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழாவில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தை, கிருஷ்ணர், ராதா, ருக்மணி வேடமணிந்த தங்கள் குழந்தைகளுடன் சந்தித்த புல்லரம்பாக்கம் பொதுமக்கள். 

திருவள்ளூர்: ''கொள்கைக்காகவும், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காவும் கூட்டணி அமைக்கும் பாஜக, 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையுடன் பெற்று வெற்றி பெறும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்-பூங்கா நகர் பகுதியில் இந்து மக்கள் கட்சியின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பங்கேற்று, குத்து விளக்கேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில், இந்து மக்கள் கட்சி கொடியை அர்ஜூன் சம்பத் ஏற்றினார்.

இவ்விழாவின் போது, புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த பொதுமக்கள், கிருஷ்ணர், ராதா, ருக்மணி வேடமணிந்த தங்கள் குழந்தைகளுடன் அர்ஜூன் சம்பத்தை சந்தித்து, ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணர் கோயிலை வருவாய்த் துறையினர் அகற்றாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மனுஅளித்தனர்.

பிறகு, செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் தெரிவித்ததாவது: ''திருவள்ளூர் அருகே புல்லரம்பாக்கம் பகுதியில் அரசு நிலத்தில் உள்ள ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணர் கோயிலை சமீபத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வருவாய்த் துறையினர் அகற்ற முயன்றுள்ளனர். அந்த பகுதிக்கு நான் நேரில் சென்று கோயிலை பார்வையிட இருந்தேன். இந்நிலையில், புல்லரம்பாக்கம், ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ணர் கோயிலுக்கு நான் சென்றால் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி, அங்கு நான் செல்ல காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது.

ஆனால், காவல்துறைக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், நான் புல்லரம்பாக்கம் ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணர் கோயிலுக்கு செல்லவில்லை. பல இடங்களில் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ வழிப்பாட்டு தலங்களுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாத தமிழக அரசு, கோயில்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் மட்டும் ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

கொள்கைக்காகவும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காவும் கூட்டணி அமைக்கும் பாஜக, தமிழக சட்டப்பேரவை - 2026 தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும். பல மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தனி பெரும்பான்மை பெற்றிருந்தாலும், கூட்டணி கட்சிகளுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கி வருகிறது.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.


x