புதுச்சேரி: புதுச்சேரி இபிஎஃப் பென்ஷனர்கள் நலச்சங்கத்தின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் அரசு ஊழியர் சம்மேளனத்தில் இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சென்னை இபிஎப் பென்ஷனர்கள் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
புதுச்சேரி பென்ஷனர்கள் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், ஆலோசகர் நடராஜன், செயலாளர் குணசேகரன், நிர்வாகி ராமலிங்கம் மற்றும் இபிஎஃப் பென்ஷனர்கள் பலர் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் இபிஎஃப் பென்சனர்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.9 ஆயிரம் பென்ஷனாக வழங்க வேண்டும். இபிஎஸ் 95 பென்ஷனர்களுக்கு இஎஸ்ஐ திட்டத்தில் இலவச மருத்துவ சிகிச்சை, மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.
மூத்தக் குடிமக்களுக்கு வழங்கி வந்த ரயில்வே சேவையை மீண்டும் வழங்க வேண்டும். 2022ம் ஆண்டு இபிஎஃப் பென்ஷனர்களுக்கு வழங்கிய தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பல்வேறு குழுக்கள் பரிந்துரையின்படி இடைக்காலமாக பென்ஷன் ரூ.3,000 உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளட்ட தீர்மானங்கள் கருத்தரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதில், வைத்திலிங்கம் எம்பி கலந்து கொண்டு பேசியதாவது: "வயதான காலத்தில் உதவும் என்பதற்காத்தான் இபிஎஃப் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. லட்சக்கணக்கானோர் அதில் தங்களுடைய பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள். இதை எப்படி ஏமாற்றலாம் என்று மத்திய அரசு பார்க்கிறது. ஆட்டோ, டிக்ஷா ஓட்டுநர் உள்ளிட்ட இபிஎஃப்பில் வராதவர்களுக்கு கூட மாநில அரசு ரூ.1,500 முதல் ரூ.3,000 ஆயிரம் வரை தருகிறார்கள்.
ஆனால் இபிஎஃப் கட்டியவர்களுக்கு, ரூ.1000-ம் கூட கொடுக்க மாட்டோம் என்று மத்திய அரசு சொல்வது வேதனை அளிக்கிறது. புதிதாக ரயில்வே பாதை எங்கும் போடுவது இல்லை. புதிதாக எதையும் செய்வதில்லை. ரயில்வே ஸ்டேஷனை மட்டும் கட்டுவார்கள். புதுச்சேரியில் ரூ.100 கோடி அளவுக்கு ரயில்வே ஸ்டேஷனை கட்டுகின்றனர். ஸ்டேஷன் பெரிதாக மாறுகிறது என்பது சந்தோஷம். கூடுதலாக ஒரு ரயில்பாதை அமைத்தால் தானே மேலும் கூடுதலாக இரண்டு ரயில்கள் வரும்.
ஆனால் ரயில்பாதை இல்லை. ரயில்வே ஸ்டேஷன் மட்டும் தான் மேம்படுத்துவார்கள். காரைக்காலில் இருந்து திருச்சிக்கு பேசஞ்சர் ரயில் செல்லும். அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. வந்தே பாரத் என்று மத்திய அரசு ரயில் விடுகிறது. அந்த ரயில் டிக்கெட் பலமடங்கு அதிகம். விமானத்தில் கூட சென்றுவிடலாம். ஆனால் வந்தே பாரத் ரயிலில் செல்ல முடியாது. வாரத்துக்கு இரண்டு வந்தே பாரத் ரயில் விடுவதாக பிரதமர் மோடி சொல்கிறார். பேசஞ்சர் ரயிலை ரத்து செய்துவிட்டு வந்தே பாரத் ரயிலை விடுவதாக கூறுகின்றனர்.
இதற்கான எண்ணம் என்னவென்றால் ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பதுதான். பழைய ரயிலை வைத்துக்கொண்டு ரயில் கட்டணத்தை உயர்த்தினால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதற்காக வந்தே பாரத் என்று பெயரை மாற்றி ரயில் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். ஆனால் மக்கள் அதனை புரிந்து கொள்வதில்லை. புதுச்சேரியில் வந்தே பாரத் ஏன்? வரவில்லை என்று கேட்கின்றனர். அதில் உள்ள தந்திரத்தை மக்கள் புரிந்து கொள்ளவில்லை.
எல்லா சலுகைகளையும் ரத்து செய்துவிட்டு, ரயில்வே கட்டணத்தை உயர்த்துவது தான் மத்திய அரசின் நோக்கம். பேசஞ்சர் ரயிலை மீண்டும் விடுங்கள் என்று கேட்டால், பரிசீலனை செய்வதாக கூறுகின்றனர். இதுபற்றி நாங்கள் கேட்டாலும் பதில் இல்லை. இதுபோன்ற நிர்வாகம் தான் மத்தியில் இருக்கிறது. இதை தட்டிக்கேட்க வேண்டிய இடத்தில் நாம் இருக்கின்றோம். நிச்சயம் மக்கள் குரலை அங்கு ஒலிக்க செய்து தேவையானதை செய்வோம்" என்று வைத்திலிங்கம் எம்.பி. கூறியுள்ளார்.