ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டார். நான்கு இடங்களில் 5 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்ததால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று இரவு முதல் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகள், தாழ்வான பகுதிகள் என பெரும்பாலான இடங்களில் மாவட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பேருந்து நிலையம், அக்ரஹாரம் ரோடு, கேணிக்கரை, மதுரையார் வீதி, அண்ணாநகர் போன்ற பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்): ராமநாதபுரத்தில் 96 மி.மீ , மண்டபத்தில் 40.2 மி.மீ , ராமேசுவரத்தில் 38 மி.மீ , பாம்பனில் 30.4 மி.மீ , தங்கச்சிமடத்தில் 41 மி.மீ , பள்ளமோர் குளத்தில் 26.8 மி.மீ , திருவாடானையில் 29.8 மி.மீ , தொண்டியில் 31 மி.மீ , வட்டாணத்தில் 46.8 மி.மீ , தீர்த்தாண்டதானத்தில் 63.3 மி.மீ, ஆர்.எஸ்.மங்கலத்தில் 32.4 மி.மீ , பரமக்குடியில் 77 மி.மீ , முதுகுளத்தூரில் 40 மி.மீ , கமுதியில் 24.8 மி.மீ , கடலாடியில் 55 மி.மீ , வாலிநோக்கத்தில் 73.2 மி.மீ என மாவட்டத்தில் சராசரியாக 46.61 மி.மீ மழை பதிவாகியுள்ளது.