புதுச்சேரி | மின்துறை தனியார் மயம் தொடர்பாக ஏன் மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தவில்லை? - அதிமுக கேள்வி


புதுச்சேரி: ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வுக்கு மக்களின் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தும் பாஜக கூட்டணி அரசு மின்துறையை தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பாக ஏன் பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தவில்லை? என புதுச்சேரி அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''லாபத்துடன் இயங்கும் மின்துறையை மத்திய பாஜக ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் கட்டளையை நிறைவேற்றும் அரசாக புதுச்சேரி ஆளும் கூட்டணி அரசு இருக்கிறது.

தனியாருக்கு தாரைவார்க்கும் அரசின் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு காலகட்டத்திலும் இடத்துக்கு தகுந்தார்போல் பொய் தகவலை அரசு தெரிவித்து வருவது வெட்கக் கேடான செயலாகும். மின்துறை அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பும் போது வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. மின்துறை தனியார் மயமாக்கப்படுமா என தற்போது கூற முடியாது என பதிலளித்தார்.

ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போதே இதே மின்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் மின்துறை தனியார் மயமாக்கப்படாது என ஏன் பதிலளித்தார் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

மின்துறை பாக்கி சம்பந்தமாக கடந்த 5.11.2024-ல் Office of the Principal Accountant General (Audit II) சார்பாக புதுச்சேரி அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், 'தனியார் வைத்துள்ள மின்பாக்கி ரூ.163 கோடியே 84 லட்சத்து 2 ஆயிரத்து 622-ம், அரசு துறைகளில் ரூ.171 கோடியே 89 லட்சத்து 17 ஆயிரத்து 930-ம், உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.129 கோடியே 79 லட்சத்த 28 ஆயிரத்து 529-ம் என மொத்தம் ரூ.465 கோடியே 52 லட்சத்து 49 ஆயிரத்து 81-ம் நிலுவை பாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக நம்முடைய நிதி செயலர் சம்பந்தபட்ட அதிகாரிகளை அழைத்து ஒரு மாதத்துக்குள் அத்தனை பாக்கிகளையும் வசூல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.

இவை அனைத்தும் மின்துறையை தனியார் மயமாக்கும் போது எவ்வித வரவு செலவு தொகையும் நிலுவை பாக்கியில்லாமல் காட்டுவதற்கான பணியை அரசு செய்கிறது. மின்துறைக்கு சுமார் 285 ஏக்கர் நிலம் உள்ளது. தற்போது ஸ்மார்ட் சிட்டி நிதியில் இருந்து ரூ.230 கோடிக்கு புதிய மின் கேபிள்கள் புதைக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் மின்சார தளவாட பொருட்கள் மின்துறைக்கு சொந்தமானதாக உள்ளது. ஆனாலும் புதுச்சேரி அரசு மின்துறையின் மொத்த மதிப்பு ரூ.1,000 கோடி எனவும் அதில் ரூ.500 கோடி அளவுக்கு தேய்மான செலவுக்கு குறைத்துக்கொண்டு மீதி மின்துறையின் மதிப்பு வெறும் ரூ.500 கோடி என மத்திய அரசு கை காட்டும் தனியாருக்கு வழங்கப்பட உள்ளது.

இது மனசாட்சி உள்ள எந்த அரசும் செய்ய துணியாத ஒரு செயலை புதுச்சேரியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு செய்கிறது. மின்துறை புதுச்சேரி மாநில மக்களின் சொத்தாகும். அந்த சொத்தை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு புதுச்சேரி மக்களிடம் இதுவரை கருத்து கூட கேட்கவில்லை. ஆண்டுதோறும் மின் கட்டண உயர்வுக்கு மக்களின் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தும் பாஜக கூட்டணி அரசு, மின்துறையை தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பாக ஏன் பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தவில்லை?

கடந்த 5 ஆண்டுகளாக மின்துறையில் சுமார் 995 மிக முக்கிய பணியிடங்கள் காலியாக உள்ளன. 3-ல் ஒரு பங்கு பணியிடங்களை நிரப்பாமல் வைத்து ஒரு செயற்கையான வேலை தட்டுப்பாட்டை மின்துறையில் ஆளும் பாஜக அரசு உருவாக்கியுள்ளது. இதன் முலம் மக்கள் மனதில் மின்துறையை தனியார் மயமாக்கிவிடலாம் என்ற ஒரு மனநிலையை திட்டமிட்டு அரசு உருவாக்கி வருகிறது.' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x