சென்னை: மின்சார ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளதால், சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து செங்கல்பட்டு பேருந்து நிலையத்துக்கு கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ''சென்னை எழும்பூர் மற்றும் விழுப்புரம் பகுதியின் சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் செங்கல்பட்டு ரயில்வே நிலையங்கள் இடையிலான பகுதியில் இன்று (நவ.20) முதல், நவ.23-ம் தேதி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பிற்பகல் 1.10 முதல் மாலை 4.10 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
எனவே, அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து செங்கல்பட்டு பேருந்து நிலையத்துக்கு 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். சிங்கப்பெருமாள் கோயில் பேருந்து நிறுத்தம் மற்றும் செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் அலுவலர்களை நியமித்து பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.