பதுவஞ்சேரி: மத்திய அரசின் ‘அம்ரூத்’ திட்டத்தின் கீழ், தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கம், அகரம் தென் மற்றும் கோவிலாஞ்சேரி கிராமங்களில், நகர்ப்புற நில மேம்பாட்டுக்காக சுமார் 600 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில், தரமான சாலை, பூங்காக்கள், பள்ளிகள் அமைக்கப்படுவதுடன், முறையாக மனைப் பிரிவுகள் பிரிக்கப்பட்டு, சகல வசதிகளுடன் தலை சிறந்த குடியிருப்புப் பகுதிகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
திமுக அரசு பொறுப்பு ஏற்றது முதல் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக தீவிரப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், விவசாயிகள் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எந்த முடிவு எட்டப்படாமல் கூட்டம் முடிந்தது.
இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தாம்பரம் அருகே மாடம்பாக்கம் பதுவஞ்சேரியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், எம்எல்ஏ தன்சிங் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.