பாகிஸ்தான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட குஜராத் மீனவர்களை மீட்ட கடலோர காவல் படை


பாகிஸ்தான் கடற்படையிடமிருந்து இந்திய கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்ட குஜராத் மீனவர்கள்

பாகிஸ்தான் கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட குஜராத் மீனவர்களை, இந்திய கடலோர காவல் படையினர் மீட்டனர். அதேபோல, இலங்கை கடற்படையிடமிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றக்கிழமை குஜராத் கடலோரப் பகுதியில் பாகிஸ்தான் கடற்படை, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு விசைப்படகை கைப்பற்றி, படகில் இருந்த 7 மீனவர்களை சிறைப்பிடித்தது. இதையறிந்த இந்திய கடலோர காவல் படை பாகிஸ்தான் கடற்படையின் ரோந்துக் கப்பலை இடைமறித்து, 7 குஜராத் மீனவர்களையும் மீட்டு ஓகா துறைமுகத்துக்கு அழைத்து வந்தனர்.

இதையறிந்த தமிழக மீனவர்கள், இந்திய கடலோர காவல்படையினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும், "100 கடல் மைல் தூரமாக இருந்தாலும் குஜராத் மீனவர்களை மீட்கும் இந்திய கடலோர காவல்படை, 20 கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களைப் பாதுகாக்க தவறுவது ஏன்? குஜராத் மீனவர்கள் மட்டும்தான் இந்தியர்களா, தமிழக மீனவர்கள் இந்தியர்கள் இல்லையா? குஜராத் மீனவர்களுக்கு கொடுக்கப்படும் பாதுகாப்பை, தமிழக மீனவர்களுக்கும் இந்திய கடலோரக் காவல் படையும், இந்திய கடற்படையும் அளிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.

x