கடலூர்: இந்திய ராணுவத்தை பற்றி அறிந்து கொள்ளும் வகையில் சிதம்பரத்தில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ‘அமரன்’ திரைப்படத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த ‘அமரன்’ திரைப்படம் பல திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் இந்திய ராணுவம் மற்றும் ராணுவ நடவடிக்கைகள், போரில் எதிரிகளை தாக்குவது, ராணுவத்தில் உள்ள பல்வேறு துறைகள் பற்றி இதில் காட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தேச ஒற்றுமையை பாதுகாக்கும் வகையில் அமைத்துள்ளது.
இந்த நிலையில் சிதம்பரத்தில் உள்ள ஷம்போர்ட் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ராணுவம் மற்றும் ராணுவ பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ராணுவத்தை பற்றி தெரிந்து கொள்ளும் வகையிலும் பள்ளியில் பயிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு திரைப்படத்தை காண்பிப்பதற்கு ஏற்பாடு செய்தனர். இன்று(நவ.19) சிதம்பரம் லேனா திரையரங்கில் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு அப்பள்ளியில் பயிலும் 276 மாணவ, மாணவிகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட ஆசிரியர் கலந்துகொண்டு திரைபடத்தை பார்த்தனர்.
முன்னதாக திரையரங்க வளாகத்தில் சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் , சிதம்பரம் நகர காவல் உதவி ஆய்வாளர் பரணிதரன் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ராணுவம் குறித்தும், ராணுவ பயிற்சிகள், ராணுவத்தினால் நாட்டிற்கு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்பது குறித்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது குறித்து பள்ளியின் தாளாளர் ஹரிகரன் கூறுகையில் இந்த திரைப்படத்தில் ராணுவம் மற்றும் ராணுவத்தில் உள்ள பல்வேறு துறைகள், ராணுவத்தில் எப்படி சேர்வது, ராணுவ பயிற்சிகள் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து பட காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதனால் மாணவர்களுக்கு ராணுவம் குறித்தும், ராணுவ பயிற்சிகள் குறித்தும், ராணுவத்தில் எப்படி சேர்வது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி நிர்வாகம் சார்பில் முழு தொகையும் செலுத்தி திரைப்படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். பள்ளி மாணவ, மாணவிகள் இப்படத்தை ரசித்து பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.