மதுரை: மதுரை மாநகராட்சியில் குப்பைத் தொட்டிகள் இல்லாத இடங்களில் குப்பை கொட்டுவோரை பிடித்து ரூ.100 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் குடியிருப்புகள், சாலைகளில் தூய்மைப் பணியாளர்கள் தினமும் குப்பையை சேகரித்து, லாரிகளில் ஏற்றிச் சென்று புறநகரில் உள்ள வெள்ளக்கல் உரக்கிடங்கில் கொட்டுகின்றனர். இதற்காக ட்ரை சைக்கிள், பேட்டரி வாகனம் உள்ளிட்ட 4 வகையான வாகனங்கள் மூலம் வீடு, வீடாக சென்று காலை முதல் குப்பையை சேகரிக்கின்றனர்.
குப்பை சேகரிப்பு: ‘புஷ் காட்’ வாகனம் மூலம் ஒரு தூய்மைப் பணியாளர் நாளொன்றுக்கு 100 முதல் 120 வீடுகளில் 80 கிலோ குப்பையை சேகரிக்கிறார். ட்ரை சைக்கிளில் ஒரு தூய்மைப் பணியாளர் சென்று, 200 முதல் 250 வீடுகளில் இருந்து 80 முதல் 100 கிலோ குப்பையை சேகரிக் கிறார். பேட்டரி வாகனங்களில் 2 பேர் சென்று 300 முதல் 400 வீடுகளில் இருந்து 400 கிலோ முதல் 500 கிலோ குப்பையை சேகரிக்கிறார்.
மினி வேனில் 3 பேர் சென்று, 600 முதல் 900 வீடுகளில் 2 டன் குப்பையை சேகரிக் கின்றனர். இதுதவிர, முக்கிய சாலைகளில் 500 முதல் 750 கிலோ குப்பை பிடிக்கும் காம்பக்டர் பின் மூலம் 1 முதல் ஒன்றரை டன் குப்பையை சேகரிக்கின்றனர். இந்நிலையில் குப்பை தொட்டிகள் வைக்கப்படாத இடங்களில் பொதுமக்கள் தினமும் கொட்டும் குப்பையை அகற்றுவது மாநகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த இடங்களில் கிடக்கும் குப்பையை தூய்மைப் பணியாளர்கள் அப்புறப்படுத்தினாலும், அடுத்த சில மணி நேரங்களில் மீண்டும் பொதுமக்கள் குப்பையை கொட்டி செல்கின்றனர்.
386 இடங்கள்: இந்த இடங்களை குப்பையால் பாதிக்கப்படக்கூடிய இடம் என மாநகராட்சி குறிப்பிடுகிறது. 100 வார்டுகளிலும் இதுபோன்று 386 இடங்கள் மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இப்பகுதிகள் பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களாக இருப்பதால் இங்கு குப்பை தொட்டியை வைக்க முடியாது. அதனால், இந்த இடங்களில் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் குப்பை கொட்டுவதை தடுக்க, மாநகராட்சி ரூ.100 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கிறது.
இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 386 இடங்களில் குப்பை கொட்டுவோரை சிசிடிவி வைத்து கண்காணிக்க முடியாது என்பதால், இந்த இடங்களில் தலா ஒரு தூய்மை பணியாளரை மறைந்திருந்து கண்காணித்து குப்பை கொட்டுவோரை பிடித்து அபராதம் விதிக்கப்படுகிறது. தனி நபர் ஒரு முறை குப்பை கொட்டினால் ரூ. 100 அபராதம், கடைக்காரர்கள் முதல்முறை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
அடுத்தடுத்து இதுபோல் அவர்கள் கொட்டி பிடிபட்டால் கூடுதல் தொகை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த வகையில் ரூ. 100 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அதனால், 500-க்கும் மேற்பட்ட இடங்களாக இருந்த மாநகராட்சி குப்பையால் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் (garbage vulnerable point) தற்போது 386 ஆக குறைந்துள்ளன. மேலும் நிரந்தரமாக இந்த இடத்தில் குப்பை கொட்டாமல் இருக்க சுவாமி சிலைகளை வைத்து, அப்பகுதி மக்களை வழிபடச் செய்வது, மரக்கன்று நடுவது, நடைமேடை அமைப்பது போன்ற நடவடிக்கைகள் குப்பை கொட்டுமிடத்தை நிரந்தரமாக மாற்ற உதவுகிறது என்று கூறினார்.