மதுரை: மதுரையில் பிரேக் பிடிக்காத அரசு நகரப் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோக்களில் மோதி விபத்து ஏற்படுத்தியது. ஆனாலும் சிறு காயங்களுடன் பயணிகள் உயிர் தப்பினர்.
மதுரை அருகிலுள்ள தென்பழஞ்சி பகுதியில் இருந்து இன்று காலை மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு பயணிகளுடன் வந்தது. அப்பேருந்து எல்லீஸ்நகர் மேம்பாலத்தில் இறங்கியபோது, திடீரென பிரேக் செயலிழந்தது. கட்டுப்பாட்டை இழந்த பேருந்தை நிறுத்த முயன்றும் முடியாமல் பாலத்தின் இறக்கத்தில் வலது புறமாக பேருந்து நிலையத்திற்கு நுழையுமிடத்திலுள்ள தடுப்பில் மோதி நிறுத்த ஓட்டுநர் திட்டமிட்டார்.
முடியாத சூழலில் நிறுத்தி இருந்த 3 ஆட்டோக்கள் மீது அடுத்தடுத்து பேருந்து மோதியது. இதில் ஆட்டோக்கள் கவிழ்ந்து முழுவதுமாக சேதம் அடைந்தன. அதிர்ஷ்டவசமாக ஆட்டோவில் பயணிகள் இல்லாததால் ஆட்டோ ஓட்டுநர்கள் உடனே தப்பியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து விபத்துக்குள்ளான பேருந்து அருகிலுள்ள தடுப்பில் மோதி நின்றதால் பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடினர். பயணிகளுக்கு சிறு, சிறு காயங்கள் ஏற்பட்டது. உரிய பராமரிப்பு இன்றி அரசுப் பேருந்தை இயக்கியதால் விபத்துக்குள்ளானது என, பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கிடையில், அரசு பேருந்து மோதியதால் சேதமடைந்த தங்களது ஆட்டோக்களை எப்படி பழுது நீக்குவது என, ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர். போதிய பராமரிப்பு இன்றி சில அரசுப் பேருந்துகளை இயக்கிவதால் விபத்து அபாயம் இருப்பதாகவும் பயணிகள் தெரிவித்துள்ளனர். இவ்விபத்து தொடர்பாக கரிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.