செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தாய் வார்டுக்கு செல்லும் நுழை வாயிலுக்கு மருத்துவமனை நிர்வாகம் பூட்டு போட்டுள்ளதால் அவசர சிகிச்சைக்கு வருபவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உள் நோயாளியாகவும், புற நோயாளியாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவசர சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம், குழந்தை நல மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மருத்துவ சிகிச்சைகள் பொதுமக்களுக்கு அளிக்கப்படுகிறது.
மருத்துவமனை வளாகத்தில் 5 நுழை வாயில்கள் உள்ள நிலையில் அவற்றில் 2 கேட் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. பழைய நுழைவாயிலில் நிர்வாகம் சார்ந்த பணியாளர்கள் மட்டும் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொன்விழா நுழைவாயில், பிரதான நுழைவாயிலாக உள்ளது. மேலும் தாய் வார்டு எனப்படும் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் பகுதியில் ஒரு நுழைவு வாயில் உள்ளது. இதனை மருத்துவமனை நிர்வாகம் திடீரென மூடியுள்ளனர்.
இதுகுறித்து வல்லம் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் கூறியதாவது: தாய் வார்டு எனப்படும் அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்லும் வழியில் உள்ள நுழைவாயில் மூடப்பட்டதால், அவசர சிகிச்சைக்காக வருபவர்கள் பொன்விழா நுழைவாயில் வழியாக மட்டுமே வர முடியும். சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றிவர வேண்டி உள்ளது.
ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறும் பொது மருத்துவமனையில் உள்ள 4 நுழைவாயில்களும் மூடப்பட்ட நிலையில் ஒரு கேட் வழியாக மட்டுமே மக்களும் சிகிச்சைக்கு வருபவர்களும் அனுமதிக்கப்படுவதால் அவசரகாலங்களில் உயிரிழப்புகள் ஏற்படக்கூட வாய்ப்பு இருக்கிறது. எனவே, மருத்துவமனை நிர்வாகத்தினர் அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் உள்ள நுழைவாயிலை உடனடியாக திறக்க வேண்டும் என்றார்.