கோவையில் சிறுபான்மையினருக்கு ரூ.4.70 கோடி தனிநபர் கடன் வழங்கப்பட்டுள்ளன: ஆட்சியர் தகவல்


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் மொத்தம் 481 பயனாளிகளுக்கு ரூ.4.70 கோடி மதிப்பீட்டில் தனிநபர் கடன்களும். 205 பயனாளிகளுக்கு ரூ.2.02 கோடி மதிப்பில் குழுக்கடன்களும் வழங்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள சிறுபான்மையின மக்கள் சுயதொழில் மேற்கொள்ள குறைந்த வட்டி விகிதத்தில் தமிழ்நாடு சிறு பான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (டாம்கோ) மூலம் கடன் வழங்கப்படுகிறது. ‘டாம்கோ’ மூலம் தனி நபர் கடன் திட்டத்தில் காய்கறி கடை, தையல் கடை, செருப்பு கடை போன்ற பல தொழில்கள் தொடங்கிடவும் அல்லது ஏற்கனவே செய்து வரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் கடன் வழங்கப்படுகிறது.

மேலும், சுய உதவிக்குழு கடன் திட்டத்தில் சிறுபான்மையினர் ஆண்கள், பெண்கள் சுய உதவிக் குழுக்களை அமைத்து தனியாகவோ சேர்ந்தோ சிறு வியாபாரம், சிறு தொழில் செய்து வருமானத்தை பெருக்கி கொள்ளும் வகையில் மீன் வியாபாரம். கைத் தொழில்கள். பலகாரக் கடை போன்ற தொழில்களுக்கு கடன் வழங்கப்படுகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் மொத்தம் 481 பயனாளிகளுக்கு ரூ.4.70 கோடி மதிப்பீட்டில் தனி நபர் கடன்களும். 205 பயனாளிகளுக்கு ரூ.2.02 கோடி மதிப்பில் குழுக்கடன்களும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், கோவை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் ரூ.94.20 லட்சம் மதிப்பில் 942 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 116 உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம், மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் 705 பயனாளிகளுக்கு நிதியுதவி, கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 1,241 மாணவிகளுக்கு ரூ.8.33 லட்சம் கல்வித்தொகை ஆகியவை வழங்கப்பட்டுள்ளது" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x