உதகை: உதகையில் நடந்த கூட்டுறவு வார விழாவில் ரூ.3.44 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டன.
நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் 71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. வார விழாவின் ஒரு பகுதியாக இன்று உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் மாவட்ட அளவிலான விழா கொண்டாடப்பட்டது. கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் ரா.தயாளன் வரவேற்றார். கூடுதல் ஆட்சியர் கௌஷிக் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் கலந்துக் கொண்டு பயனாளிகளுக்கு கடன் உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் கூட்டுறவுச் சங்கங்களின் மூலம் 31 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3.19 கோடி மதிப்பீட்டின் கடனுதவியும், 2 கல்விக் கடன்கள் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் கடனுதவியும், கலைஞரின் கனவு இல்லம் கடன் 4 உறுப்பினர்களுக்கு ரூ.2.75 கடனுதவி என மொத்தம் 37 பயனாளிகளுக்கு ரூ.3.44 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட அளவிளான சிறந்த சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் வழங்கப்பட்டன.
மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட 21 கூட்டுறவுச் சங்கங்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது பொதுமக்களுக்கு சிறப்பாக சேவை புரிந்த 5 விற்பனையாளர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் 5 உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன, கூட்டுறவுத்துறை பணியாளர்களுக்கு மாவட்ட அளவில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 20 பணியாளர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டன.
மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 7 மாணவ, மாணவியர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய அளவில் நடத்தப்பட்ட கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றிப் பெற்ற 8 பயிற்சியாளர்களுக்கு பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.
கூட்டுறவுத்துறையில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளுக்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு ஆகியவற்றில் அதிக மதிப்பெண் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கூட்டுறவுத்துறை பணியாளர் மகள். கெளசிகா, ஹர்சினி மற்றும் தன்சிகா ஆகியோரின் உள்ளுணர்வு பயிற்சி குறித்து செய்து காட்டினர்.
தும்மனட்டி அரசினர் மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகள் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடந்தது. ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய பணியாளர்கள் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைப்பெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் சந்தோஷ், உதகை நகராட்சி தலைவர் வாணிஸ்வரி, துணைத் தலைவர் ரவிக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.