மோசமான ஊழல் நிறைந்த மக்கள் விரோத ஆட்சியை பார்த்ததில்லை: நாராயணசாமி வேதனை


நாராயணசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்திரா காந்தி பிறந்த நாள் விழாவில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது: "புதுச்சேரியில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால், அடுத்து காங்கிரஸ் ஆட்சிதான் என்று மெத்தனமாக உள்ளோம். இது கூடாது. இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் பிறகு நாட்டையே பிடித்தார்கள்.

அதேபோல் புதுச்சேரியில் மக்களுக்கு சேவை செய்யாமல் நிறைய அரசியல் வியாபாரிகள் வந்துள்ளார்கள். இவர்களை முறியடிக்க வேண்டும். புதுச்சேரியில் பாஜக என ஒரு கட்சி கிடையாது. 2016ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 18 இடங்களில் போட்டியிட்டது. அப்போது 17 தொகுதிகளில் டெபாசிட் போய்விட்டது. அந்த கட்சி காங்கிரஸில் இருந்து சென்றவர்களை வைத்து தேர்தலில் நின்றது. கோடிக் கணக்கில் செலவு செய்து 6 பேர் வெற்றி பெற்றார்கள். இவர்களில் 4 பேர் மார்ட்டின் கம்பெனிக்கு செல்கிறார்கள்.

மார்ட்டின் ஒரு வியாபாரி. அவரிடமும், அவர் குடும்பத்தினரிடமும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி ரூ.9 கோடியை பறிமுதல் செய்துள்ளது. வங்கியில் இருந்து ரூ.5 கோடியை முடக்கி இருக்கிறார்கள். இதுபோன்ற ஒரு அமலாக்கப் பிரிவு துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டவரின் காலில் புதுச்சேரி எம்எல்ஏ விழுகிறார். இது ஒரு மானக்கேடு.

ரூ.10 கோடி கொடுக்கிறார், ரூ.20 கோடி கொடுக்கிறார் வாருங்கள், நாம் தனிக்கட்சி ஆரம்பித்து நிற்போம் என்று பேரம் பேசுகிறார்கள். இவர்கள் அரசியல் வியாபாரிகள் அல்ல. இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

புதுச்சேரியை பொறுத்தவரை மக்களவை தேர்தலில் எப்படி ஒரு நல்ல தீர்ப்பு கொடுத்தார்கள். அதேபோல் ஒரு நல்ல தீர்ப்பை சட்டப்பேரவை தேர்தலில் கொடுக்க வேண்டும். என்.ஆர் காங்கிரஸ் - பாஜக ஊழல் பேர் வழிகளை மக்கள் புறம்தள்ள வேண்டும். சந்தர்ப் பவாதிகளையும் மக்கள் தூக்கி எறிய வேண்டும். பொதுப்பணித் துறையில் 30 சதவீதம் கமிஷன், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மிகப்பெரிய ஊழல், வீடு கட்டும் திட்டத்தில் ஊழல் என நிறைய ஆதாரங்களை எடுத்து வைத்துள்ளேன்.

ரங்கசாமி ஆட்சி ஊழல் ஆட்சி. ஒட்டுமொத்தமாக எல்லோரும் கூட்டு கொள்ளை அடிக்கிறார்கள். இதுபோன்ற மோசமான ஊழல் நிறைந்த மக்கள் விரோத ஆட்சியை புதுச்சேரியில் பார்த்தது கிடையாது. இனிமேல் ஆட்சிக்கு வர மாட்டோம் என்று கொள்ளை அடிக்கிறார்கள். பணத்தை வைத்து அரசியல் செய்கிறவர்கள், கொள்கை இல்லாதவர்கள், மக்கள் சேவை செய்யாதவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி மட்டும்தான் மக்கள் நலனுக்காக பாடுபடுகின்ற கட்சி. புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற பாடுபடுகின்ற பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இன்னும் ஒரு வருடத்தில் தேர்தல் வருகிறது. தேர்தலுக்கு நாம் தயாராக வேண்டும். கட்சியை பொறுத்தவரை வெற்றி பெறுவர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு அளிக்க வேண்டும்.

இந்த தொகுதியில் இருக்கிறேன், எனக்கு சீட் கொடுங்கள் என்ற கதையே இருக்கக் கூடாது. வெற்றி பெறுபவர்களுக்கு மட்டுமே சீட் கொடுக்க வேண்டும் என்று கட்சி தலைமை கூறியுள்ளது. எனவே, நாம் ஒற்றுமையாக இருந்து கருத்து வேறுபாடுகளை மறந்து 2026ல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர அனைவரும் பாடுபட வேண்டும். அதற்கான சூளுரையை இந்திரா காந்தி பிறந்த நாளில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று நாராயணசாமி பேசினார்.

x