புதுச்சேரி: பொதுமக்களிடம் ரூ.15 கோடி சுருட்டிய அரசு ஊழியர்கள்- முதல்வரிடம் எதிர்க்கட்சித்தலைவர் மனு


புதுச்சேரி: அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தைக் கூறி பொதுமக்களிடம் ரூ.15 கோடி சுருட்டிய அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை எதிர்க்கட்சித் தலைவர் சிவா சந்தித்து மனு அளித்தார்.

அதன் விவரம்: 'வில்லியனுார் கொம்யூன் ஒதியம்பட்டு கிராமம் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் அரசின் குடிசைமாற்று வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அவரின் மனைவி சுபலட்சுமி (அங்கன்வாடி ஊழியர்) மற்றும் மைத்துனர் கோபி ஆகியோர் கூட்டாக சேர்ந்து ஒதியம்பட்டு மற்றும் பல்வேறு கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களிடம் ரூபாய் 1 லட்சம் டெபாசிட் செய்தால் மாதம் ரூபாய் 8 ஆயிரம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

150 பேரிடம் ஒரு லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரையில் சுமார் ரூ.15 கோடிக்கு மேல் வசூல் செய்து ஏமாற்றியுள்ளனர். ஓதியம்பட்டு கிராமத்தில் மட்டும் 60க்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர். பணம் கேட்டு வலியுறுத்திய போது பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளதாகவும், அந்த பணம் வந்தவுடன் வட்டியும், அசலும் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் நம்பிக்கையாக கூறியுள்ளார்.

தொடர்ந்து காலதாமதம் செய்ததால் பாதிக்கப்பட்டவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டனர். இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஜெயக்குமார், அவரின் மனைவி சுபலட்சுமி, தம்பி ஜெய்கணேஷ், அக்கா சாந்தி, மாமா குமார் ஆகியோருடன் சேர்ந்து பணம் கொடுத்தவர்களை தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக திட்டி, புகார் கொடுத்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டுகின்றனர்.

பணம் கிடைக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். பணம் கட்டிய நபர் ஒருவர் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துள்ளார். பணத்தை வசூலித்தவர்கள், வேறு தொழில்களில் முதலீடு செய்தும், சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாகவும் தெரியவருகிறது. அப்பாவி மக்களிடம் மோசடி செய்த கும்பல் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

x