மாடம்பாக்கம்: அதிமுக ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் 'அம்ரூத்' திட்டத்தின் கீழ், கொண்டு வரப்பட்ட நகர்ப்புற நில தொகுப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு சுமார் 600 ஏக்கருக்கு மேல் நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் இன்று (நவ 19) தாம்பரம் அருகே பதுவஞ்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் 'அம்ரூத்' திட்டத்தின் கீழ், தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், அகரம் தென் மற்றும் கோவிலாஞ்சேரி கிராமங்களில், நகர்ப்புற நில மேம்பாடிற்காக சுமார் 600 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதியில், தரமான சாலை, பூங்காக்கள், பள்ளிகள் அமைக்கப்படுவதுடன், முறையாக மனைப் பிரிவுகள் பிரிக்கப்பட்டு, சகல வசதிகளுடன் தலை சிறந்த குடியிருப்புப் பகுதிகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
தமிழகத்தில், தரமான சாலை, பூங்கா, பள்ளி, சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்கள் என, என சகல வசதிகளுடன் கூடிய திட்டமிட்ட நகர் பகுதியை உருவாக்கும் வகையில், நகர்ப்புற நில தொகுப்பு மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. அப்போது விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக அரசு பொறுப்பு ஏற்றது முதல் இந்த திட்டத்தினை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக தீவிரப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், விவசாயிகள் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது இதில் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எந்த முடிவு வெட்டப்படாமல் கூட்டம் முடிந்தது. இதனுடைய விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கும் இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது, என அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்றாலும் விவசாயிகள் எதிர்ப்பு காலமாக அந்த திட்டத்தை செயல்படுத்தாமல் நாங்கள் இருந்தோம். ஆனால், திமுக வந்தவுடன் திட்டத்தை வேகப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் தாம்பரம் அருகே மாடம்பாக்கம் பதுவாஞ்சேரியில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் டி.கே.எம் சின்னையா, மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் பங்கேற்றனர். திட்டத்தை கைவிட வலியுறுத்தி அதிமுகவினர் கோஷம் எழுப்பினர்.