பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல வசதியாக விரைவு பேருந்தில் 90 நாள் முன்பே முன்பதிவு வசதி தொடக்கம்


சென்னை: அரசு விரைவு பேருந்துகளில் 90 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை நேற்று முதல் அமலானது. பொங்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதால், பயணிகள் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகின்றனர். தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், திருப்பதி, பெங்களூரூ உள்ளிட்ட இடங்களில் தினசரி 1,080-க்கும் மேற்பட்ட டீலக்ஸ், குளிர்சாதன வசதி கொண்ட விரைவு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதுதவிர, பிற போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் விரைவு பேருந்துகளில் பல ஆயிரக்கணக்கான முன்பதிவு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பேருந்துகளில் நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். இந்த பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு காலம் பொருத்தவரை 60 நாட்களாக இருந்தது. இந்நிலையில், இந்த முன்பதிவு காலம் 90 நாட்களாக மாற்றப்பட்டு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் வாயிலாக 6.54 லட்சம் பேர் பயணித்திருந்தனர். வரும் 2025-ம் ஆண்டு ஜன.14-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் லட்சக்கணக்கானோர் சொந்த ஊருக்கு செல்வார்கள்.

அரசு விரைவு பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன்புதான் இருக்கையை முன்பதிவு செய்ய முடியும். தற்போது, 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி திங்கள்கிழமை (நவ.18) முதல் அமலாகியுள்ளது. இதன்காரணமாக, பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க முடியும். கூடுதல் பேருந்துகளை இயக்கவும் நிர்வாகத்துக்கும் வசதியாக இருக்கும்.

முன்பதிவு தொடக்கம்: இதற்கிடையே, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு பயணிப்பதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் ஆர்வமாக டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். வரும் ஜனவரி முதல் வாரத்தில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்படும். நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அரசு போக்குவரத்துக் கழக www.tnstc.in இணையதளம் அல்லது டிஎன்எஸ்டிசி செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x