விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் டிச.21-ம் தேதி நடைபெறும் என பேரியக்கம் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகளுக்கும், விவசாய தொழிலுக்கும் உரிய முக்கியத்துவத்தை மத்திய, மாநில அரசுகள் வழங்கவில்லை. தமிழகத்தின் சாகுபடி பரப்பு 48 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கர் குறைந்துவிட்ட நிலையில், அதை அதிகரிப்பதற்கான புதிய பாசனத் திட்டங்கள் எதையும் ஆட்சியாளர்கள் செயல்படுத்தவில்லை.
விவசாயிகளின் துயரங்களை மத்திய, மாநில அரசுகளுக்கு உரைக்கும் வகையில் எடுத்துக்கூறி, தீர்வுகளைப் பெறுவதற்காக பாமகவின் இணை அமைப்பான தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு டிசம்பர் 21-ம் தேதி திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பேரியக்கத்தின் நிறுவனரான நான், பாமக தலைவர் அன்புமணி, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, மற்றும் பல்வேறு விவசாய அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். தமிழ்நாடு உழவர் பேரியக்கம் மற்றும் பாமகவின் இணை மற்றும் சார்பு அமைப்புகளின் அனைத்து நிலை நிர்வாகிகளும் இந்த மாநில மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.
மாநாட்டுப் பணிகளின் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் தலைவர் கோ.ஆலயமணி, செயலாளர் இல.வேலுச்சாமி ஆகியோர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், புதுச்சேரி - காரைக்காலிலும் சுற்றுப்பயணம் செய்கின்றனர். அவர்களின் பணிகளுக்கு பாமக மாவட்டச் செயலாளர்களும், பிற நிர்வாகிகளும் ஒத்துழைக்க வேண்டும்.
தமிழகத்தின் விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த மாநில மாநாட்டில் அரசியல், சமூக வேறுபாடுகளைக் கடந்து, விவசாயிகள் என்ற ஒற்றைப் போர்வையில் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் குடும்பத்துடன் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்