சென்னை: லண்டனில் அண்ணாமலையை விஜய் சந்தித்ததாக வரும் தகவல் பொய்யானது என்று பாஜக, தவெக ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.
2026-ல் சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை, லண்டன் சென்று விஜய் ரகசியமாக சந்தித்ததாகவும், இதனை தொடர்ந்து திமுகவை தவிர வேறு எந்த கட்சியையும் குறிப்பாக, விஜய்யை விமர்சிக்க கூடாது என்று பாஜகவினருக்கு அண்ணாமலை உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறும்போது, “லண்டனில் அண்ணாமலை - விஜய் சந்திப்பு என்பது பொய்யான தகவல். அதுமாதிரி எந்த சந்திப்பும் நடைபெறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது. தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்காக, புதிய கட்சிகளை சேர்த்து வலுவான கூட்டணியை தேசிய தலைமை அமைக்கும்” என்றார்.
இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளிடம் கேட்டபோது, “கொள்கை எதிரி, அரசியல் எதிரி, தேர்தல்நிலைப்பாடு குறித்து கட்சியின் தலைவர் விஜய் தெளிவாக விளக்கி உள்ளார். எங்களுடைய தலைமையில் கூட்டணி அமைக்கப்படும். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு இருக்கும். விஜய், அண்ணாமலையை சந்தித்ததாக வெளியாகும் தகவல் தவறானது. கூட்டணி குறித்து விஜய் முடிவு செய்வார்” என்றனர்.