கோவை: கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட, காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணு கோபால் புதுடெல்லி செல்வதற்காக நேற்று (நவ.17) இரவு கோவை விமான நிலையத்துக்கு வந்தார்.
அவரை, காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையிலான குழுவினரும், ஐஎன்டியுசி மாநில தலைவர் கோவை செல்வன் தலைமையிலான குழுவினரும் வரவேற்று அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், இரு தரப்பினரும் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு இருந்த மற்ற நிர்வாகிகள், துணை ராணுவப் படையினர் ஆகியோர் இரு தரப்பினரையும் சமானதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து கோவை செல்வன் தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (நவ.18) புகார் அளித்தனர்.
இது குறித்து ஐஎன்டியுசி கோவை செல்வன் கூறும்போது, “இவ்விவகாரம் குறித்து கட்சி தலைமையிடம் முறையாக தகவல் தெரிவித்துவிட்டு, போலீஸாரிடம் புகார் அளித்துள்ளோம்” என்றார். இது குறித்து தேசிய செயலாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார் கூறும்போது, “என் மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் என்னை வேண்டுமென்றே வம்பிழுத்து தகராறில் ஈடுபட்டனர்” என்றார்.